புதிய வகை கொரோனா விஸ்வரூபம் எடுக்க வாய்ப்பு; சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் எச்சரிக்கை


புதிய வகை கொரோனா விஸ்வரூபம் எடுக்க வாய்ப்பு; சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் எச்சரிக்கை
x

புதிய வகை கொேரானா இன்னும் சில மாதங்களில் விஸ்வரூபம் எடுக்க வாய்ப்பு உள்ளதாக சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பெங்களூரு:


துமகூருவில் நேற்று 2 அரசு ஆஸ்பத்திரிகளை திறந்து வைத்து சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் பேசியதாவது:-

ஒரு சில மாதங்களில் விஸ்வரூபம்

சீனா, அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளை தற்போது கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. சீனாவில் கொரோனா பரவல் அதிகமாக உள்ளது. நமது நாட்டிலும் இன்னும் ஒரு சில மாதங்களில் புதிய வகை கொரோனா வைரஸ் விஸ்வரூபம் எடுக்க வாய்ப்புகளும், சாத்தியங்களும் உள்ளது. புதிய வகை கொரோனா பரவிய பின்பு முன் எச்சரிக்கையாக இருந்து எந்த பயனும் ஏற்பட போவதில்லை.

கொரோனா பரவலுக்கு முன்பே முன் எச்சரிக்கையாக இருந்தால், அதன் வேகத்தை கட்டுப்படுத்தி பாதுகாப்பாக இருக்கலாம். கொரோனா பரவலை தடுக்க முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது உள்ளிட்ட விதிமுறைகளை பின்பற்ற வேண்டியது அவசியமாகும். தற்போதே தீவிரமாக எடுத்து கொண்டு முன் எச்சரிக்கையாக இருப்பது அவசியமாகும்.

பூஸ்டர் தடுப்பூசி

கேரள மாநிலத்தில் உங்களது ஆரோக்கியம், உங்களது கையில் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கர்நாடகத்தை பொறுத்தவரை உங்களது ஆரோக்கியம், எங்களது பொறுப்பு என்று சுகாதாரத்துறை செயல்பட்டு வருகிறது. கொரோனா வரும் முன் நம்மை பாதுகாத்து கொள்வோம். முகக்கவசம் அணிவதால் எந்த பாதிப்பும் ஏற்பட போவதில்லை. முகக்கவசம் அணியாவிட்டால், நமது உயிருக்கே பாதிப்பை உண்டாக்கி விடும். பெங்களூருவில் கொரோனா பரவல் குறித்து மாநகராட்சி அதிகாரிகளுடன் விரிவாக ஆலோசிக்கப்படும்.

பெங்களூருவுக்கு என்று தனியாக விதிமுறைகள், வழிகாட்டுதல்கள் வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும். பெலகாவியில் நடைபெறும் கூட்டத்தொடரின் போதே கொரோனா பரவலை தடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசித்து இறுதி முடிவு எடுக்கப்பட உள்ளது. முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கூட பூஸ்டர் தடுப்பூசி போட்டுக் கொள்ளும்படி கேட்டுக் கொண்டுள்ளார். அதனால் மக்கள் தடுப்பூசி போட முன்வர வேண்டும்.

இவ்வாறு மந்திரி சுதாகர் கூறினார்.


Next Story