தலையில் கல்லை போட்டு போலீஸ்காரர் கொலை
தீர்த்தஹள்ளி அருகே தலையில் கல்லைபோட்டு போலீஸ் காரர் கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிவமொக்கா-
தீர்த்தஹள்ளி அருகே தலையில் கல்லைபோட்டு போலீஸ் காரர் கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பணியில் அலட்சியம்
சிவமொக்கா மாவட்டம் தீர்த்தஹள்ளி தாலுகா பகுதியை சேர்ந்தவர் பூர்னேஷ் (வயது 35). இவர் தீர்த்தஹள்ளி போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் ஒரு குழந்தை உள்ளது. பூர்னேசிற்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. இதனால் பணியில் அலட்சியமாக செயல்பட்டதாக கூறப்படுகிறது.
இதற்கு முன்பு இவர் ஆகும்பே, கும்சி ஆகிய போலீஸ் நிலையங்களில் பணியாற்றினார். அங்கு சரியாக பணியாற்றவில்லை என்று கூறி, தீர்த்தஹள்ளிக்கு பணியிடமாற்றம் செய்ததாக கூறப்படுகிறது.
பணியிடை நீக்கம்
இந்த போலீஸ் நிலையத்திற்கு வந்த பின்னரும் மதுகுடித்துவிட்டு வந்து, பணியாற்றினார். அதன்படி கடந்த சில வாரங்களுக்கு முன்பு குடிபோதையில் பணிக்கு வந்துள்ளார். அப்போது இதை பார்த்த உயர் போலீஸ் அதிகாரிகள் அவரை பணியிடை நீக்கம் செய்தனர்.
இதனால் பணிக்கு செல்லாமல் இருந்த அவர் 2 நாட்களுக்கு முன்பு வீட்டில் இருந்து வெளியே சென்று வருவதாக கூறிவிட்டு சென்றார். ஆனால் அதன் பின்னர் வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த மனைவி மற்றும் குடும்பத்தினர் அவரை தேடி அழைந்தனர். ஆனால் பூர்னேஷ் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதனால் உறவினர்கள் தீர்த்தஹள்ளி போலீசில் பூர்னேஷ் காணவில்லை என்று புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் பூர்னேசை தேடி வந்தனர்.
கல்லைபோட்டு கொலை
இந்தநிலையில் நேற்று முன்தினம் மீன் மார்க்கெட் பகுதியில் பூர்னேஷ் இறந்து கிடந்தார். இதை பார்த்த அந்த பகுதி மக்கள் தீர்த்தஹள்ளி போலீசிற்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீர்த்தஹள்ளி போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் விசாரணை நடத்தினர்.
அந்த விசாரணையில் முன்விரோதத்தில் யாரோ அவரது தலையில் கல்லை போட்டு கொலை செய்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.