கியாஸ் சிலிண்டர்களை சரியாக வினியோகிக்காததால் சாலைமறியல்


கியாஸ் சிலிண்டர்களை சரியாக வினியோகிக்காததால் சாலைமறியல்
x

ஹனூர் அருகே மலைப்பகுதியில் கியாஸ் சிலிண்டர்களை சரியாக வினியோகிக்காததால் கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கொள்ளேகால்:-

சாம்ராஜ்நகர் மாவட்டம் ஹனூர் தாலுகாவிற்கு உட்பட்டது மாதேஸ்வரன் மலை பகுதி. இந்த பகுதியில் ஏராளமான மக்கள் வசித்து வருகிறார்கள். இந்த நிலையில் அந்த பகுதி மக்களுக்கு கியாஸ் சிலிண்டர்களை சம்பந்தப்பட்ட சிலிண்டர் வினியோக நிறுவனங்கள் சரியாக வினியோகம் செய்வதில்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுபற்றி அவர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்தும் அவர்கள் இதுவரையில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரத்தில் இருந்த மக்கள் நேற்று முன்தினம் ஹனூர்-மாதேஸ்வரன் மலை சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

இந்த சாலை மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. இதுபற்றி அறிந்த மாதேஸ்வரன் மலை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இனிமேல் தாமதம் ஆகாமல் கியாஸ் சிலிண்டர்களை சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் சரியாக வினியோகிக்க நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதி அளித்தனர். அதன்பேரில் அப்பகுதி கிராம மக்கள் தங்களது போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.


Next Story