ஆந்திரா: காதலிக்க மறுத்த பள்ளி மாணவி கழுத்து அறுத்து ஆசிட் வீச்சு - தாய் மாமன் வெறிச்செயல்
ஆந்திராவில் காதலிக்க மறுத்த பள்ளி மாணவியின் மீது ஆசிட் வீசி கழுத்தை அறுத்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
திருப்பதி:
ஆந்திர மாநிலம் பொட்டி ஸ்ரீராமுலு மாவட்டம் ,வெங்கடாசலம் மண்டலம், வேதையயா பாளையத்தை சேர்ந்தவர் 14 வயது சிறுமி. இவர் அங்குள்ள அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று மாலை மாணவி பள்ளியில் இருந்து வீட்டிற்கு வந்தார். மாணவியின் பெற்றோர் வெளியே சென்று இருந்ததால் அவர் மட்டும் வீட்டில் தனியாக இருந்தார்.
அப்போது மாணவியின் வீட்டிற்கு வந்த அவரது தாய்மாமன் நாகராஜ் (வயது 22). மாணவியிடம் தன்னை காதலிக்க வேண்டும் என வற்புறுத்தினார். அதற்கு மாணவி ஒப்புக்கொள்ளவில்லை. இதனால் ஆத்திரமடைந்த நாகராஜ் மாணவியை பலாத்காரம் செய்ய முயன்றார். மாணவி எதிர்ப்பு தெரிவித்ததால் தன்னிடம் இருந்த திராவகத்தை (ஆசிட்) எடுத்து மாணவியின் முகத்தில் வீசினார். மேலும் கத்தியை எடுத்து மாணவியின் கழுத்தை அறுத்தார்.
மாணவி வலியால் அலறி துடித்தார். அக்கம் பக்கத்தினர் மாணவியின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்தனர். இதனைக் கண்ட நாகராஜ் அங்கிருந்து தப்பி ஓடினார். மாணவியின் கருத்து அறுக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் மாணவி கிடந்தது கண்ட அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்து அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர். மேலும் வெங்கடாச்சலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
வீட்டிற்கு வந்த மாணவியின் பெற்றோர் கருத்து அறுக்கப்பட்டு கிடந்த தனது மகளை மீட்டு சிகிச்சைக்காக அங்குள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சையாக தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து தகவல் அறிந்த அமைச்சர் கோவர்த்தன ரெட்டி ,போலீஸ் சூப்பிரண்டு விஜயாராவ் ஆகியோர் ஆஸ்பத்திரிக்கு சென்று மாணவியின் பெற்றோருக்கு ஆறுதல் கூறினார். போலீசார் வழக்கு பதிவு செய்து தலை மறைவாக உள்ள நாகராஜை தேடி வருகின்றனர். காதலிக்க மறுத்த அக்காள் மகளை கழுத்து அறுத்து, ஆசிட் வீசப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.