தத்தா பீட விவகாரத்தில் விரைவில் சுமுக முடிவு; முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பேச்சு
தத்தா பீட விவகாரத்தில் விரைவில் சுமுக முடிவு எடுக்கப்படும் என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.
சிக்கமகளூரு:
ஜனசங்கல்ப யாத்திரை
கா்நாடகத்தில் அடுத்த ஆண்டு (2023) சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. இதனால் ஆளும் பா.ஜனதா, காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சியினர் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்கள். இந்த நிலையில் பா.ஜனதா சார்பில் ஜனசங்கல்ப யாத்திரை என்ற பெயரில் பிரசாரம் நடந்து வருகிறது. இதில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, எடியூரப்பா ஆகியோர் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரசாரம் செய்து வருகிறார்கள்.
இந்த நிலையில் நேற்று சிக்கமகளூரு மாவட்டம் கொப்பாவில் ஜனசங்கல்ப யாத்திரை நடந்தது. இதில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, எடியூரப்பா உள்பட பலர் கலந்துகொண்டனர். முன்னதாக இதில் கலந்துகொள்வதற்காக முதல்-மந்திரி பசவராஜ் பொம்ைம, பெங்களூருவில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கொப்பாவுக்கு வந்தார். அவருக்கு பா.ஜனதா சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
சிருங்கேரி ஆஸ்பத்திரி
அப்போது ஹெலிபேடில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில், சிக்கமகளூரு மாவட்டத்தில் காட்டு யானைகள் அட்டகாசம் அதிகமாக உள்ளது. வனப்பகுதியில் இருந்து வெளியேறி கிராமங்களில் புகுந்து அட்டகாசம் செய்து வரும் யானைகளை பிடித்து அடர்ந்த வனப்பகுதியில் விட நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் காட்டு யானைகள் வெளியேறுவதை தடுக்க வனத்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உத்தரவிடப்பட்டுள்ளது.
பாக்கு மரங்களை தாக்கும் மஞ்சள் இலை நோயை தடுக்க அறிவியல்பூர்வமாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சிருங்கேரியில் 100 படுக்கைகள் கொண்ட அரசு ஆஸ்பத்திரி கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இன்னும் இரண்டே மாதங்களில் நானே வந்து அடிக்கல் நாட்டுவேன் என்றார்.
பெருமை அளிக்கிறது
இதையடுத்து கொப்பா அரசு பள்ளி வளாகத்தில் நடந்த ஜனசங்கல்ப யாத்திரையை முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். இதில் முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா, மத்திய மந்திரி ஷோபா, மந்திரிகள் பைரதி பரசவராஜ், கோவிந்த் கார்ஜோள், சி.டி.ரவி எம்.எல்.ஏ. உள்பட பலர் கலந்துகொண்டனர். இந்த கூட்டத்தில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பேசியதாவது:-
சிக்கமகளூரு மாவட்டம் கொப்பா இயற்கை எழில் சூழ்ந்த மலை வாசஸ்தலமாக உள்ளது. எங்கு பார்த்தாலும் பச்சை பசேலென்று காணப்படும் இங்கு வந்து உங்களை காண வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த ஜனசங்கல்ப யாத்திரையில் கலந்துகொண்டது பெருமை அளிக்கிறது.
ஜல்ஜீவன் திட்டம்
இரட்டை என்ஜின் அரசு மூலம் மாநிலத்தில் பல்வேறு வளர்ச்சி பணிகள் நடந்து வருகிறது. மத்திய அரசின் ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் கர்நாடகத்தில் கிராமப்புறங்களில் 30 லட்சம் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இன்னும் 1½ ஆண்டுகளில் இது 1½ கோடியாக அதிகரிக்கும்.
சிக்கமகளூரு மாவட்டத்தில் சிருங்கேரி, கொப்பா பகுதிகளுக்கு ரூ.1000 கோடியில் பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. பா.ஜனதா ஆட்சியில் வீடு இல்லாதவர்களுக்கு வீடு கட்டி கொடுக்கப்பட்டுள்ளது. பா.ஜனதா மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மக்களுக்காக இன்னும் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்துவோம். மத்திய, மாநில அரசின் சலுகைகள் கடைகோடியில் உள்ள மக்களுக்கும் சென்றடையும் வகையில் நாங்கள் பணியாற்றி வருகிறோம்.
200 ஏக்கர் நிலம்
பா.ஜனதா ஆட்சியில் 8 ஆயிரம் அரசு பள்ளிகளுக்கு கட்டிடம் கட்டப்பட உள்ளது. இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கி கொடுக்கப்பட்டள்ளது. சிருங்கேரியில் சாலை அமைக்க ரூ.5 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் ரூ.5 கோடி நிதி ஒதுக்கப்படும். கஸ்தூரி ரங்கன் அறிக்கையை அமல்படுத்தி நில பிரச்சினையை சரி செய்ய மாநில அரசு முன்வந்துள்ளது.
மத்திய அரசு கொடுத்த இலவச ரேஷன் அரிசியை கூட காங்கிரஸ் கட்சியினர் தாங்கள் கொடுத்ததாக மக்களிடம் பொய்யான பிரசாரத்தை செய்தனர். சிருங்கேரி காங்கிரஸ் எம்.எல்.ஏ. ராஜேகவுடா ரூ.145 கோடியில் 200 ஏக்கர் நிலத்தை வாங்கி உள்ளார். அவ்வளவு பணம் அவருக்கு எப்படி வந்தது. இதுகுறித்து லோக் அயுக்தாவில் புகார் கொடுத்து விசாரணை நடத்தப்படும்.
தத்தா பீடம்
சிக்கமகளூருவில் உள்ள தத்தா பீட விவகாரத்தில் விரைவில் சுமுக முடிவு எடுக்கப்படும். மாநில அரசு சார்பில் அமைக்கப்பட்ட குழு விரைவில் தீர்க்கமான முடிவை எடுக்கும். முல்லையன்கிரி மலையில் இருந்து தத்தா பீடம் செல்வதற்கு ரோப்கார் அமைக்க பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.