காலில் காயமடைந்த யானைக்கு சிகிச்சை அளிக்க பிரத்யேக காலணி வடிவமைப்பு

காலில் காயமடைந்த யானைக்கு சிகிச்சை அளிக்க பிரத்யேக காலணியை வடிவமைத்து வனத்துறை கால்நடை மருத்துவ அதிகாரி அசத்தியுள்ளார்.
மைசூரு
பிரத்யேக காலணி
உலகம் முழுவதும் சுகாதாரத் துறையில் பல புரட்சிகரமான மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. தினமும் புதிய புதிய சிகிச்சை முறைகள் கண்டுபிடிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் காலில் காயமடைந்த யானைக்கு சிகிச்சை அளிக்க பிரத்யேக காலணியை வனத்துறை கால்நடை மருத்துவ அதிகாரி ஒருவர் கண்டுபிடித்து அசத்தியுள்ளார்.
அதன் விவரம் பின்வருமாறு:-
யானை காலில் காயம்
கர்நாடக மாநிலம் மைசூரு மாவட்டம் உன்சூர் தாலுகாவில் உள்ள தொட்டஹரவேயில் யானைகள் முகாம் உள்ளது. இங்கு 60 வயதான குமரி என்ற யானை பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த யானையின் வலது காலின் பக்கவாட்டில் காயம் ஏற்பட்டுள்ளது.
உடனே கால்நடை டாக்டர்கள் யானையின் காலில் மருந்து வைத்து கட்டுப்போட்டனர். ஆனால் அந்த கட்டு உடனே அவிழ்ந்து விழுந்த வண்ணம் இருந்தது. இதனால் யானைக்கு காலில் ஏற்பட்ட காயம் குணமாகாமல் இருந்தது. இதன் காரணமாக யானை நடக்க முடியாமல் அவதிப்பட்டது.
குணமாகி வருகிறது
இதைத்தொடர்ந்து நாகரஒலே புலிகள் காப்பகத்தில் வனத்துறை கால்நடை மருத்துவ அதிகாரியாக பணியாற்றும் டாக்டர் ரமேசுக்கு புதிய யோசனை தோன்றியது. அதாவது காயமடைந்த யானைக்கு பிரத்யேகமாக வாகன டயரில் ஒரு காலணியை உருவாக்கினார்.
தற்போது காயமடைந்த காலின் பாதத்தில் டாக்டர்கள் குழுவினர் மருந்து வைத்து கட்டி, காலில் பிரத்யேக காலணியை அணிந்து விட்டனர்.
இதையடுத்து தற்போது யானையின் காலில் ஏற்பட்ட காயம் குணமடைந்து வருகிறது. இதனால் யானைக்கு பிரத்யேக காலணி வடிவமைத்த கால்நடை டாக்டர் ரமேசை வனத்துறையினரும், வன ஆர்வலர்களும் பாராட்டி வருகிறார்கள்.
மண்டியாவை சேர்ந்தவர்
டாக்டர் ரமேசின் சொந்த ஊர் மண்டியா மாவட்டம் மத்தூர்தாலுகா ஒசஹள்ளி கிராமம் ஆகும். 29 வயதான இவர் வனத்துறை மருத்துவ பிரிவில் சேர வேண்டும் என்ற ஆசையில் கடந்த 2018-ம் ஆண்டு பணியில் சேர்ந்தார்.
இதுவரை இவர் 6 புலிகள், 35 யானைகள், 50-க்கும் மேற்பட்ட சிறுத்தைகளுக்கு சிகிச்சை அளித்து குணமாக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.






