கள்ளக்காதல் விவகாரத்தில் வாலிபர் படுகொலை; வளர்ப்பு தாய், கள்ளக்காதலன் உள்பட 4 பேர் கைது
பாகல்கோட்டை அருகே, கள்ளக்காதல் விவகாரத்தில் வாலிபரை படுகொலை செய்த வளர்ப்பு தாய், கள்ளக்காதலன் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
பாகல்கோட்டை: கர்நாடக மாநிலம் பாகல்கோட்டை அருகே, கள்ளக்காதல் விவகாரத்தில் வாலிபரை படுகொலை செய்த வளர்ப்பு தாய், கள்ளக்காதலன் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
கால்வாயில் வாலிபர் பிணம்
பாகல்கோட்டை மாவட்டம் முதோல் தாலுகா லோகபுரா போலீஸ் எல்லைக்கு உட்பட்ட நாகனாபுரா பகுதியில் வசித்து வருபவர் கமலவ்வா. இவருக்கு 2 மகள்கள் உள்ளனர். இவர்கள் 2 பேருக்கும் திருமணம் முடிந்து விட்டது. கமலவ்வா தனக்கு ஆண் பிள்ளை இல்லை என்பதால் வசந்த் லிங்கப்பா குரபள்ளி (வயது 24) என்பவரை கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு தத்தெடுத்து வளர்த்து வந்தார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.
இந்த நிலையில் கடந்த மாதம் (ஜூலை) 19-ந் தேதி வசந்த்தை காணவில்லை என்று கூறி லோகபுரா போலீஸ் நிலையத்தில் கமலவ்வா புகார் அளித்து இருந்தார். அதன்பேரில் மாயமான வசந்த்தை போலீசார் தேடிவந்தனர். இந்த நிலையில் பெலகாவி மாவட்டம் சவதத்தி தாலுகா முரகோடா கிராமத்தில் ஓடும் கால்வாயில் இருந்து வசந்த் பிணமாக மீட்கப்பட்டார். அவரை மர்மநபர்கள் கொலை செய்து உடலை கால்வாயில் வீசி சென்றது தெரியவந்தது.
கள்ளக்காதலை கண்டித்ததால்
இந்த நிலையில் கமலவ்வாவின் நடவடிக்கையில் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் அவரை பிடித்து போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அப்போது வசந்த்தை தனது கள்ளக்காதலன், மருமகன்களுடன் சேர்ந்து கொலை செய்ததை கமலவ்வா ஒப்புக்கொண்டார். இதனால் கமலவ்வாவை கைது செய்த போலீசார் அவர் கொடுத்த தகவலின்பேரில் கள்ளக்காதலனான நிங்கப்பா, மருமகன்களான பீமப்பா, பீரண்ணா ஆகியோரை கைது செய்தனர். விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியாகின.
அதாவது பீமப்பா, பீரண்ணாவின் தந்தை தான் நிங்கப்பா ஆவார். நிங்கப்பாவுக்கும், கமலவ்வாவுக்கும் பல ஆண்டுகளாக கள்ளக்காதல் இருந்து உள்ளது. இந்த நிலையில் நிங்கப்பாவுடனான கள்ளக்காதலை கைவிடும்படியும், சொத்தில் பங்கு கேட்டும் கமலவ்வாவிடம், வசந்த் தகராறு செய்து வந்ததாக தெரிகிறது. இதனால் வசந்த்தின் மார்பில் கல்லை போட்டும், கழுத்தை நெரித்தும் 4 பேரும் சேர்ந்து கொலை செய்து உடலை கால்வாயில் வீசியது தெரியவந்தது. கைதான 4 பேர் மீதும் லோகபுரா போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.