வாய்த்தகராறில் வாலிபர் படுகொலை
மங்களூரு அருகே வாய்த்தகராறில் வாலிபர் படுகொலை செய்த வழக்கில் நண்பன் கைது செய்யப்பட்டார்.
மங்களூரு-
தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு அருகே பஜ்பே போலீஸ் எல்லைக்கு உட்பட்ட மரவூர் கிராமத்தில் வசித்து வந்தவர் சஞ்சய்(வயது 21). இவரது நண்பர் சோஹான் யாதவ்(19). இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் இரவு அப்பகுதியில் உள்ள கடற்கரைக்கு சென்றுள்ளனர். பின்னர் அங்கு ஒரு ஓட்டலில் உணவு சாப்பிட்டனர். அதையடுத்து அவர்கள் தாங்கள் சாப்பிட்ட தட்டை கழுவ சென்றபோது, இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த சோஹான் யாதவ், சஞ்சயை சரமாரியாக தாக்கினார். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த சஞ்சயை, அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
ஆனால் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே சஞ்சய் பரிதாபமாக இறந்தார். பின்னர் இந்த கொலை சம்பவம் குறித்து பஜ்பே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து சஞ்சயின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மாவட்ட அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து சோஹான் யாதவை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.