ஜவுளிக்கடையில் பயங்கர தீவிபத்து; பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்


ஜவுளிக்கடையில் பயங்கர தீவிபத்து; பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்
x

பத்ராவதி அருகே, ஜவுளிக்கடையில் மின்கசிவால் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் பொருட்கள் எரிந்து நாசமானது.

சிவமொக்கா;

ஜவுளிக்கடை

சிவமொக்கா மாவட்டம் பத்ராவதி தாலுகா சென்னகிரி சாலையில் ஜவுளிக்கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த 20-ந்தேதி இரவு ஜவுளிக்கடையின் உரிமையாளர் மல்லிகார்ஜூன் கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார். இதையடுத்து நேற்றுமுன்தினம் அதிகாலை கடையில் இருந்து கரும்புகை வெளியே வந்துள்ளது.

இதைப்பாா்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக கடையின் உரிமையாளர் மல்லிகார்ஜூனுக்கு தகவல் கொடுத்தனர். உடனே அவர் கடைக்கு விரைந்து வந்து கதவை திறந்து பார்த்தார். அப்போது கடையில் இருந்த துணிகள் உட்பட அனைத்து பொருட்களும் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது.

தண்ணீரை பீய்ச்சி அடித்து...

இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த மல்லிகார்ஜூன் உடனடியாக இதுபற்றி பத்ராவதி போலீசாருக்கும், தீயணைப்பு படையினருக்கும் தகவல் தெரிவித்தார். அந்த தகவலின்பேரில் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்க முயற்சித்தனர்.

இதையடுத்து பல மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயை கட்டுக்குள் கொண்டு வந்து முழுவதுமாக அணைத்தனர். இதில் அருகில் இருந்த கடைகளுக்கு தீ பரவாமல் தடுக்கப்பட்டது. ஆனாலும் கடையில் இருந்த அனைத்து பொருட்களும் தீயில் எரிந்து நாசமானது.

பல லட்சம் ரூபாய்

இதையடுத்து சம்பவ இடத்திற்கு பத்ராவதி போலீசார் விரைந்து வந்து பார்வையிட்டனர். மேலும் தீவிபத்திற்கான காரணம் குறித்து ஆய்வு செய்தனர். அப்போது கடையில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தான் தீவிபத்து ஏற்பட்டது தெரியவந்தது.

தீவிபத்தினால் கடையில் இருந்த பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது தெரியவந்தது. மேலும், இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story