மன்னர் அமர்ந்து தனியார் தர்பார் நடத்தும் தங்க, வைர, நவ ரத்தினங்களால் ஆன சிம்மாசனம் ஜோடிப்பு


மன்னர் அமர்ந்து தனியார் தர்பார் நடத்தும் தங்க, வைர, நவ ரத்தினங்களால் ஆன சிம்மாசனம் ஜோடிப்பு
x
தினத்தந்தி 20 Sep 2022 6:45 PM GMT (Updated: 20 Sep 2022 6:47 PM GMT)

தசரா விழாவையொட்டி மன்னர் அமர்ந்து தனியார் தர்பார் நடத்தும் தங்க, வைர, நவ ரத்தினங்களால் ஆன சிம்மாசனம் நேற்று ஜோடிக்கப்பட்டது.

மைசூரு:

மைசூரு தசரா விழா

உலகப்புகழ் பெற்ற மைசூரு தசரா விழா வருகிற 26-ந் தேதி தொடங்கி அடுத்த மாதம்(அக்டோபர்) 5-ந் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் தீவிரமாக நடந்து வருகிறது. தசரா விழாவின்போது நவராத்திரியையொட்டி 9 நாட்களும் மைசூரு அரண்மனையில் பல்வேறு நிகழ்ச்சிகள், பாரம்பரிய முறைப்படியான பூஜைகள், சடங்குகள், சம்பிரதாயங்கள் நடைபெறும்.

அதன் ஒருபடியாக அந்த 9 நாட்களிலும் மன்னர் தனியார் தர்பார் நடத்துவது வழக்கம். அதுபோல் இந்த ஆண்டும் மைசூரு அரண்மனையின் இளைய மன்னர் யதுவீர் கிருஷ்ணதத்த சாமராஜ உடையார் மைசூரு அரண்மனையில் உள்ள அம்பா விலாசில் வைத்து தனியார் தர்பார் நடத்த உள்ளார்.

8 பாகங்கள்

இதற்காக மன்னர் அமரும் சிம்மாசனம் நேற்று ஜோடிக்கப்பட்டது. அந்த சிம்மாசனம் தங்க, வைர, நவரத்தினங்களால் ஆனது. அது 8 பாகங்களைக் கொண்டது. இந்த சிம்மாசனத்தை ஒவ்வொரு ஆண்டும் மண்டியா மாவட்டம் பாண்டவபுரா தாலுகா கெஜ்ஜஹள்ளி கிராமத்தைச் சேர்ந்த 6 பேர் பாரம்பரியமாக ஜோடித்து வருகிறார்கள். அவர்களே இந்த ஆண்டும் சிம்மாசனத்தை ஜோடித்தனர்.

இதையொட்டி நேற்று காலை 7 மணி முதல் மதியம் 1.30 மணி வரை அரண்மனைக்குள் சுற்றுலா பயணிகள் உள்பட யாரும் அனுமதிக்கப்படவில்லை. காலை 10.30 மணிக்கு சுபமுகூர்த்தத்தில் தொடங்கிய சிம்மாசனம் ஜோடிக்கும் பணி மதியம் 1 மணிக்கு முடிந்தது. இந்த நிகழ்ச்சியில் இளைய மன்னர் யதுவீர், மகாராணி பிரமோதா தேவி, மாவட்ட கலெக்டர் சார்பில் வருவாய் துறை அதிகாரி மற்றும் அரசு அதிகாரிகள் பங்கேற்றனர்.

சிம்மாசனம்

சிம்மாசனம் ஜோடிக்கப்பட்ட பின்பு அது வெள்ளை துணியால் மூடி வைக்கப்பட்டது. மேலும் சில பூஜைகளும் நடந்தன. இந்த சிம்மாசனத்துக்கு வருகிற 25-ந் தேதி சில பூஜைகள் நடத்தப்படும் என்றும், அதன்பின்னர் 26-ந் தேதி முதல் இளைய மன்னர் யதுவீர் காப்பு கட்டி அதில் அமர்ந்து தனியார் தர்பார் நடத்துவார் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது. நேற்று சிம்மாசனம் ஜோடிக்கப்பட்ட போது குடை பகுதியில் சிறிதளவு சேதம் ஏற்பட்டு இருந்தது. அதை அங்கிருந்த அனைவரும் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். எப்படி அது சேதம் அடைந்தது என்பது தெரியவில்லை. அதுபற்றி விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டு உள்ளது.


Next Story