தொடர் அட்டகாசம் செய்த காட்டு யானை பிடிபட்டது


தொடர் அட்டகாசம் செய்த காட்டு யானை பிடிபட்டது
x
தினத்தந்தி 29 Nov 2022 6:45 PM GMT (Updated: 29 Nov 2022 6:45 PM GMT)

மூடிகெரே தாலுகாவில் தொடர் அட்டகாசம் செய்த காட்டு யானை பிடிபட்டது. ‘கும்கி’ யானைகள் உதவியுடன் வனத்துறையினர் அந்த யானையை பிடித்தனர்.

சிக்கமகளூரு:

காட்டு யானைகள் அட்டகாசம்

சிக்கமகளூரு மாவட்டம் மூடிகெரே தாலுகாவில் வனப்பகுதியையொட்டி உள்ள கிராமங்களில் கடந்த சில மாதங்களாக காட்டு யானைகள் தொடர்ந்து அட்டகாசம் செய்து வருகின்றன. கடந்த மாதம் குந்தூர் கிராமத்தை சேர்ந்த ஷோபா என்பவரை காட்டு யானை கொன்றிருந்தது. மேலும் விளைபயிர்களை நாசப்படுத்தி வருவதால், விவசாயிகள் தங்கள் நிலங்களுக்கு செல்லவே அச்சத்தில் உள்ளனர். மேலும் காட்டு யானைகளை பிடிக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்த நிலையில் மூடிகெரே தாலுகாவில் தொடர் அட்டகாசத்தில் ஈடுபட்டு வரும் 3 யானைகளை பிடிக்க வனத்துறையினர் மாநில அரசிடம் அனுமதி கேட்டிருந்தனர். இதையடுத்து மாநில அரசும், 3 காட்டு யானைகளை பிடிக்க அனுமதி வழங்கியது.

கும்கிகள் வருகை

இதையடுத்து வனத்துறையினர் தொடர் அட்டகாசம் செய்து வரும் 3 காட்டு யானைகளையும் பிடிக்க தீவிர நடவடிக்கை மேற்கொண்டனர். மேலும், காட்டு யானைகளை பிடிக்க அபிமன்யு, அஜய், மகேந்திரா உள்ளிட்ட 6 'கும்கி' யானைகளும் வரவழைக்கப்பட்டன. இதையடுத்து வனத்துறையினர் கும்கி யானைகள் உதவியுடன் வனப்பகுதியில் காட்டு யானைகளை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை 6 மணி அளவில் குந்தூர் அருகே குன்ரா வனப்பகுதியில் ஒரு காட்டு யானை சுற்றித்திரிந்தது தெரியவந்தது. இதையடுத்து வனத்துறையினர் அந்த காட்டு யானையை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

பிடிபட்டது

அப்போது அந்தப்பகுதியில் சுற்றித்திரிந்த காட்டு யானை, கும்கி யானைகள் மற்றும் வனத்துறையினரை பார்த்ததும் வனப்பகுதிக்குள் ஓட முயன்றது. அந்த சமயத்தில், வனத்துறையினர் கால்நடை மருத்துவர்கள் உதவியுடன் துப்பாக்கியில் மயக்க மருந்து கலந்த ஊசியை காட்டு யானை மீது செலுத்தினர். மயக்க ஊசி செலுத்தியதும் சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் ஓடிய காட்டு யானை மயங்கி விழுந்தது.

இதையடுத்து அந்த யானைக்கு கயிறு கட்டிய வனத்துறையினர், அதற்கு மயக்கம் தெளிந்து எழுந்த பிறகு கும்கி யானைகள் உதவியுடன் லாரியில் ஏற்றினர். பின்னர் அந்த யானை அங்குள்ள யானைகள் முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு வைத்து காட்டு யானைக்கு கால்நடை மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர்.

அந்த யானையை வனப்பகுதியில் விடுவதா அல்லது பயிற்சி முகாமில் வைத்து பராமரிப்பதா என்பது குறித்து வனத்துறையினர் ஆலோசித்து வருகிறார்கள்.

தேடுதல் வேட்டை

இதையடுத்து மற்ற 2 காட்டு யானைகளை பிடிக்கவும் வனத்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். நேற்று காலை முதல் கும்கி யானைகள் உதவியுடன் காட்டு யானைகளை தேடும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.


Next Story