வெடி வைத்து தகர்த்தபோது கல்குவாரியில் பாறை வெடித்து சிதறி தொழிலாளி பலி


வெடி வைத்து தகர்த்தபோது கல்குவாரியில் பாறை வெடித்து சிதறி தொழிலாளி பலி
x

கல்குவாரியில் வெடி வைத்து பாறையை தகர்த்தபோது வெடித்து சிதறி தொழிலாளி ஒருவர் பலியானார். இன்னொருவர் படுகாயம் அடைந்தார்.

கோலார் தங்கவயல்:-

கல்குவாரி

கோலார் மாவட்டம் நரசாபுரா அருகே கே.பி. ஒசஹள்ளி கிராமத்தில் ஒரு கல்குவாரி செயல்பட்டு வருகிறது. அங்கு கடந்த 4 நாட்களுக்கு முன்பு வெடி வைத்து பாறைகள் தகர்க்கப்பட்டது. அப்போது ஒசஹள்ளி கிராமத்தைச் சுற்றி உள்ள கிராமங்களில் 40-க்கும் மேற்பட்ட வீடுகளில் விரிசல் ஏற்பட்டது. இதனால் வீடுகள் எப்போது இடிந்து விழும் என்ற பீதியில் மக்கள் உள்ளனர். அவர்கள் வீதிகளில் தஞ்சம் அடைந்து இருக்கிறார்கள்.

மேற்கண்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் இதுபற்றி பலமுறை கனிமவள மேம்பாட்டு துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தும் அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை என்று கூறப்படுகிறது.

தொழிலாளி பலி

இந்த நிலையில் நேற்று காலையில் கல்குவாரியில் மீண்டும் வெடி வைத்து பாறைகள் தகர்க்கப்பட்டது. அப்போது வெடித்து சிதறிய ஒரு சிறிய பாறை அங்கு வேலை செய்து கொண்டிருந்த ஒரு தொழிலாளி மீது விழுந்தது. இதில் படுகாயம் அடைந்த தொழிலாளி சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும் ஒரு தொழிலாளி படுகாயம் அடைந்தார். அதை பார்த்த ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவல் அறிந்து கோலார் மாவட்ட கனிம வள மேம்பாட்டு துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

யாதகிரியை சேர்ந்தவர்

அவர்கள் படுகாயம் அடைந்த தொழிலாளியை மீட்டு சிகிச்சைக்காக கோலார் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக தனியார் ஆஸ்பத்தரிக்கு அந்த தொழிலாளி அனுப்பி வைக்கப்பட்டார். இதற்கிடையே போலீசார் நடத்திய விசாரணையில் பாறை உருண்டு விழுந்து பலியான தொழிலாளி யாதகிரி மாவட்டத்தைச் சேர்ந்த சோமு ஜாதவ்(வயது 29) என்பது தெரியவந்தது.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து கல்குவாரி உரிமையாளர் அப்துல் ரகுமான் உள்பட பலரை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த நிலையில் சம்பவ இடத்திற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நாகராஜ், துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெய்சங்கர் உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகள் நேரில் வந்து ஆய்வு மேற்கொண்டனர். தொடர்ந்து இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இச்சம்பவம் கோலார் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story