வாடகை காரில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை
போலி பதிவெண் கொண்ட வாடகை காரில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கார் டிரைவர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பெங்களூரு:-
விமான நிலையத்திற்கு...
மும்பையை சேர்ந்த இளம்பெண் ஒருவர் பெங்களூருவுக்கு வந்தார். அவர் பெங்களூரு டிக்கென்சன் சாலையில் இருந்து விமான நிலையம் செல்வதற்கு முடிவு செய்தார். அதற்காக வாடகை கார் ஒன்றை பதிவு செய்தார். இதையடுத்து அவர் அந்த காரில் ஏறி புறப்பட்டார். காரை சந்திரசேகர் என்பவர் ஓட்டினார். அவர் சாலையில் அதிவேகமாக காரை ஓட்டினார். இதனால் பயந்துபோன பெண், காரை நிறுத்துமாறு கூறினார்.
ஆனால் டிரைவர் தொடர்ந்து காரை அதிவேகமாக ஓட்டினார். சிறிது தூரம் சென்றபிறகு காரை நிறுத்தினார். எனினும் காரில் இருந்தபோது பெண்ணுக்கு அவர் பாலியல் தொல்லையும் கொடுத்துள்ளார். இதையடுத்து காரில் இருந்து இறங்கிய பெண், உடனடியாக ஐகிரவுண்ட் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரில் கார் டிரைவர் சந்திரசேகர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறினார்.
உரிமம் ரத்து
இதையடுத்து போலீசார் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்தனர். மேலும் அவர்கள் கார் டிரைவர் சந்திரசேகர் உள்பட 3 பேரை கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவரது உண்மை பெயர் அமித் குமார் என்பதும், அவர் தனியார் நிறுவனம் சார்பில் கார் ஓட்டி வந்த நிலையில் அவரது உரிமத்தை அந்த நிறுவனம் ரத்து செய்ததும் தெரிந்தது.
மேலும் அவர் போலியான பதிவெண்ணை பயன்படுத்தி காரில் சந்திரசேகர் என்ற பெயரில் சுற்றி வந்ததும் தெரிந்தது. இதையடுத்து அவர் உள்பட 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து போலி பதிவெண் கொண்ட காரையும், அதுதொடர்பான ஆவணங்களையும் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனத்திற்கு போலீசார் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்.