அரசியலமைப்பை காப்பாற்ற "கடவுளின் தலையீட்டுடன்" ஆம் ஆத்மி உருவாக்கப்பட்டது: அரவிந்த் கெஜ்ரிவால்


அரசியலமைப்பை காப்பாற்ற கடவுளின் தலையீட்டுடன் ஆம் ஆத்மி உருவாக்கப்பட்டது: அரவிந்த் கெஜ்ரிவால்
x

கோப்புப்படம்

அரசியலைமைப்பையும், நாட்டையும் பாதுகாக்க கடவுள் ஆம் ஆத்மி கட்சியை படைத்திருக்கிறார் என்று டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்தார்.

புதுடெல்லி,

டெல்லியில் இந்திரா காந்தி மைதானத்தில் ஆம் ஆத்மி கட்சியின் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் முதல் தேசிய கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில், 20 வெவ்வேறு மாநிலங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சுமார் 1,500 பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

அந்தக் கூட்டத்தில் பேசிய டெல்லி மாநில முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால், "கடந்த 1949, நவ.25ஆம் தேதி இந்திய அரசியலமைப்புச் சட்டம் ஏற்று கொள்ளப்பட்டதில் இருந்து 60 ஆண்டுகளாக காங்கிரசும் பாஜவும் நாட்டை சீரழித்து உள்ளன. அதனால், கடவுள் தலையிட்டு 2012ல் நாட்டையும் அரசியலமைப்பையும் காப்பாற்ற ஆம் ஆத்மி கட்சியை படைத்தார். இது தற்செயலான நிகழ்வு இல்லை. கடவுள் நம்மிடம் பொறுப்பை ஒப்படைத்துள்ளார். அதனை மனதில் வைத்து வளர்ச்சிக்காக பாடுபடவேண்டும்.

தீமைகளை அழிக்க கிருஷ்ணர் அனுப்பப்பட்டது போல, ஊழல், பணவீக்கம், வேலைவாய்ப்பின்மை, போன்றவைகளில் இருந்தும், அரசியலமைப்பு மற்றும் நாட்டை தீமைகளிடமிருந்து காப்பாற்றவும் கடவுள் ஆம் ஆத்மி கட்சியை உருவாக்கியுள்ளார்.

பத்து வருடங்களுக்கு முன்பு ஆம் ஆத்மி கட்சியைத் தொடங்கும் போது, இந்த இந்திராகாந்தி மைதானமே நிரம்பும் அளவிற்கு கட்சிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் வருவார்கள் என்று நினைக்கவில்லை.

ஆம் ஆத்மி கட்சியின் நேர்மை மற்றும் கொள்கைகளை பா.ஜ.,வால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. டெல்லி மற்றும் பஞ்சாபில், விதைகள் மரங்களாக மாறி, தங்களின் இனிமையான நிழல் மற்றும் பழங்களால் மக்களை ஆறுதல்படுத்துகின்றன. இந்த விதை இப்போது குஜராத்திலும் ஒரு மரமாக மாறும்" என்று அவர் பேசினார்.


Next Story