டெல்லியில் கட்டுமான தொழிலாளர் நலனுக்காக ஒதுக்கப்பட்ட பணத்தை ஆம் ஆத்மி அரசு பறிக்கிறது - சம்பித் பத்ரா குற்றச்சாட்டு


டெல்லியில் கட்டுமான தொழிலாளர் நலனுக்காக ஒதுக்கப்பட்ட பணத்தை ஆம் ஆத்மி அரசு பறிக்கிறது - சம்பித் பத்ரா குற்றச்சாட்டு
x

டெல்லியில் போலியாக கட்டுமான தொழிலாளர்களை பதிவு செய்து அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட பணத்தை ஆம்ஆத்மி அரசு கட்சி பணிக்காக செலவிடுகிறது என பாஜக செய்தி தொடர்பாளர் சம்பித் பத்ரா குற்றம் சாட்டியுள்ளார்.

புதுடெல்லி,

டெல்லியில் கட்டுமானத் தொழிலாளர் நலனுக்காக ஒதுக்கப்பட்ட பணத்தை ஆம் ஆத்மி அரசு பறிக்கிறது என பாஜக செய்தி தொடர்பாளர் சம்பித் பத்ரா குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில், டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவாலின் நோக்கமும் நேர்மையும் மாசுபட்டு விட்டது. கட்டுமானத் தொழிலாளர்களைப் பொறுத்தவரை இது இந்தியாவின் மிகப்பெரிய ஊழல் வழக்கு ஆகும். மேலும், கட்டுமானத் தொழிலாளர்களுக்காக பணிபுரியும் 3 தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் அவர்களது பதிவில் பெரும் ஊழல் செய்துள்ளதாக குற்றம் சாட்டினர்.

டெல்லியில் கடந்த 2006-21 ம் ஆண்டுகளில் சுமார் 13 லட்சம் கட்டுமானத் தொழிலாளர்கள் மாநில அரசின் தொழிலாளர் துறையில் பதிவு செய்துள்ளனர். இதில், 9 லட்சத்திற்கும் அதிகமானோர் 2018 முதல் 2021 வரை பதிவு செய்துள்ளனர்.

டெல்லி கட்டுமானத் தொழிலாளர்கள் துறையில் 2 லட்சம் போலி பதிவுகள் இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதில் 65 ஆயிரம் தொழிலாளர்கள் ஒரே செல்போன் நம்பரையும், 15 ஆயிரத்து 700 பேர் ஒரே முகவரியையும், 4 ஆயிரத்து 370 பேர் ஒரே நிரந்தர முகவரியையும் அளித்துள்ளனர்.

கட்டுமானத் தொழிலாளர்களின் நலனுக்காக ஒதுக்கப்பட்ட பணத்தை டெல்லி அரசு பறித்து, அதனை ஆம் ஆத்மி கட்சி தொடர்பான பணிகளுக்கு செலவழிக்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.


Next Story