பாலியல் வழக்கில் கைதான மடாதிபதிக்கு ஆஸ்பத்திரியில் மருத்துவ பரிசோதனை
பாலியல் வழக்கில் கைதான மடாதிபதி சிவமூர்த்தி முருகா சரணருவை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்திய போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
சித்ரதுர்கா: பாலியல் வழக்கில் கைதான மடாதிபதி சிவமூர்த்தி முருகா சரணருவை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்திய போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாலியல் வழக்கு
கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா மாவட்டத்தில் உள்ள முருக மடத்தின் மடாதிபதியாக பொறுப்பு வகித்து வருபவர் சிவமூர்த்தி முருகா சரணரு (வயது 64). இவர் மடத்தின் விடுதியில் தங்கி படித்து வந்த 2 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
இது தொடர்பாக வந்த புகாரின் பேரில் கடந்த 26-ந் தேதி சித்ரதுர்கா போலீசார் சிவமூர்த்தி முருகா சரணரு உள்பட 5 பேர் மீது போச்சோ சட்டப்பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். அவர்கள் 5 பேரையும் போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் கடந்த 1-ந் தேதி சிவமூர்த்தி முருகா சரணருவை தனிப்படை போலீசார் மடத்தில் வைத்து அதிரடியாக கைது செய்தனர். பின்னர் அவரை ரகசிய இடத்தில் வைத்து விசாரித்தனர்.
3 நாள் போலீஸ் காவல்
நேற்று முன்தினம் சித்ரதுர்கா கோர்ட்டில் அவரை போலீசார் ஆஜர்படுத்த சென்றபோது நெஞ்சுவலி ஏற்படுவதாக கூறினார். போலீசார் அவரை ஆஸ்பத்திரியில் சேர்த்து, முதல் உதவி சிகிச்சை அளித்தனர். பின்னர் சித்ரதுர்கா கோர்ட்டில் அவரை ஆஜர்படுத்தினர். அப்போது நீதிபதி, மடாதிபதி சிவமூர்த்தி முருகா சரணருவை 3 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கினார்.
இதையடுத்து அவரை காவலில் அழைத்து சென்ற போலீசார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். பின்னர் இரவு அங்கிருந்து அவரை அழைத்து சென்ற போலீசார் ரகசிய இடத்தில் வைத்து அவரிடம் விசாரணையை தொடங்கினர். நள்ளிரவு வரை அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது போலீசாரின் எந்த கேள்விக்கும் அவர் பதில் அளிக்கவில்லை என்று தகவல் வெளியாகி உள்ளது.
பதில் கூறவில்லை
இதையடுத்து நேற்று அதிகாலை மீண்டும் போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர். துணை போலீஸ் சூப்பிரண்டு அனில்குமார் தலைமையிலான போலீசார் விசாரித்தனர்.
அப்போதும் மடாதிபதி போலீசாரின் கேள்விகளுக்கு சரியான முறையில் பதில் கூறவில்லை. இதையடுத்து மடாதிபதிக்கு போலீசார் காலை சிற்றூண்டி வாங்கி கொடுத்தனர். அதை அவர் சாப்பிட்டு முடித்த சிறிது நேரத்தில் அவரை மருத்துவ பரிசோதனைக்காக போலீசார் சித்ரதுர்கா அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர்.
மருத்துவ பரிசோதனை
அங்கு அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. மேலும் அவருக்கு ஆண்மை பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதாவது மடாதிபதிக்கு 60 வயதுக்கு மேல் ஆவதால், அவருக்கு இந்த ஆண்மை பரிசோதனை நடத்தப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். அத்துடன் அவரது சிறுநீர், ரத்தம், தலைமுடி, நகம் போன்றவற்றை மாதிரியாக டாக்டர்கள் சேகரித்தனர்.
அதனை அவர்கள் ஆய்வுக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதையடுத்து மீண்டும் மடாதிபதியை போலீசார், சித்ரதுர்கா போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். இருப்பினும் அவர் சரியான பதில் கூறவில்லை.
அடுக்கடுக்கான கேள்விகள்
நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று மாலை வரை மடாதிபதியிடம் போலீசார் பாலியல் வழக்கு தொடர்பாக சுமார் 50 கேள்விகள் கேட்டுள்ளனர். அதில் குறிப்பாக எத்தனை ஆண்டுகளாக மடாதிபதியாக இருக்கிறீர்கள?, மடத்தின் வளாகத்தில் விடுதி உள்ளதா? எத்தனை ஆண்டுகளாக விடுதி செயல்படுகிறது?, பாதிக்கப்பட்ட மாணவிகள் சாமி தரிசனத்திற்கு வந்தார்களா? என அடுக்கடுக்காக கேள்வி கேட்டப்பட்டன.
இதில் 30 கேள்விகளுக்கு மடாதிபதி பதில் அளித்தார். மீதமுள்ள கேள்விகளுக்கு பதில் அளிக்காமல் மவுனமாக இருந்தார். மேலும் பழிவாங்கும் நோக்கில் தன் மீது பாலியல் வழக்கு தொடரப்பட்டு உள்ளதாக போலீஸ் விசாரணையின் போது மடாதிபதி கூறியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மடாதிபதி கூறிய தகவலை போலீசார் வீடியோவில் வாக்குமூலமாக பதிவு செய்துள்ளனர்.
நாளை போலீஸ் காவல் நிறைவு
மடாதிபதிக்கு நாளையுடன் (திங்கட்கிழமை) போலீஸ் காவல் நிறைவு பெறுகிறது. இதனால் இன்றும், நாளையும் அவரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி போலீசார் திட்டமிட்டு உள்ளனர்.