அபிமன்யு யானைக்கு நாளை முதல் பாரம் சுமந்து செல்லும் பயிற்சி


அபிமன்யு யானைக்கு நாளை முதல் பாரம் சுமந்து செல்லும் பயிற்சி
x
தினத்தந்தி 14 Sept 2023 12:15 AM IST (Updated: 14 Sept 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

மைசூரு அரண்மனை வளாகத்தில் அபிமன்யு யானைக்கு நாளை (வெள்ளிக்கிழமை) முதல் பாரம் சுமந்து செல்லும் பயிற்சி அளிக்கப்படுகிறது.

மைசூரு

தசரா விழா

அரண்மனை நகரம் என்றழைக்கப்படும் மைசூருவில் ஆண்டுதோறும் விஜயதசமியையொட்டி தசரா விழா கொண்டாடப்பட்டு வருகிறது. உலகப்பிரசித்தி பெற்ற தசரா விழாவை காண வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்து லட்சணக்கானோர் குவிவார்கள்.

10 நாட்கள் நடைபெறும் தசரா விழாவில் மைசூரு நகரமே விழாக்கோலம் பூண்டிருக்கும். இந்தநிலையில், இந்த ஆண்டு தசரா திருவிழா அடுத்த மாதம் (அக்டோபர்) 15-ந் தேதி தொடங்கி 24-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது.

இந்த ஆண்டு தசரா விழாவில் 14 யானைகள் பங்கேற்க உள்ளன. இதில், கடந்த 5-ந் தேதி முதல் கட்டமாக 9 யாைனகள் உன்சூர் வனப்பகுதியில் இருந்து மைசூரு அரண்மனை வளாகத்திற்கு கொண்டு வரப்பட்டன.

அங்கு யானைகளுக்கு நடைபயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இதில் அர்ஜுனா என்ற யானை எச்.டி. கோட்டை தாலுகாவில் ஆட்கொல்லி புலியை பிடிக்க சென்றுள்ளது.

பாரம் சுமந்து செல்லும் பயிற்சி

இந்தநிலையில், நாளை (வெள்ளிக்கிழமை) முதல் அரண்மனை வளாகத்தில் உள்ள யானைகளுக்கு பாரம் சுமந்து செல்லும் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

இதுகுறித்து மாவட்ட வனத்துறை அதிகாரி சவுரப் குமார் கூறுகையில், தசரா விழாவில் 750 கிலோ எடையுள்ள தங்க அம்பாரியை சுமந்து செல்லும் அபிமன்யு யானைக்கு நாளை (வெள்ளிக்கிழமை) முதல் பாரம் சுமந்து செல்லும் பயிற்சி அளிக்கப்படுகிறது.

அதாவது மைசூரு அரண்மனை வளாகத்தில் இருந்து ராஜவீதிகள் வழியாக தீப்பந்தம் விளையாட்டுகள் நடைபெறும் பன்னிமண்டபம் வரை 5 கிலோ மீட்டர் தூரம் பாரம் சுமந்து செல்லும் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

முதல் நாள் அபிமன்யு யானைக்கு 350 கிலோ மணல் மூட்டைகளையும், 2-ம் நாளில் 400 கிலோ மணல் மூட்டைகள் என படிப்படியாக எடையின் அளவு அதிகப்படுத்தப்படும். ஆயிரம் கிலோ வரை அபிமன்யு யானைக்கு பாரம் சுமந்து செல்லும் பயிற்சி அளிக்க உள்ளோம்.

வெடிகுண்டு சத்தம்

அபிமன்யு யானையுடன், பீமா, கோபி, தனஞ்செயா, மற்றும் 2-ம் கட்டமாக வரும் யானைகளில் ஒன்றான கோபால சுவாமி ஆகிய 4 யானைகளுக்கும் பாரம் சுமந்து செல்லும் பயிற்சி அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 2-ம் கட்ட யானைகள் இந்த மாதம் இறுதியில் வருகிறது.

இந்த யானைகளுடன் சேர்ந்து ஏற்கனவே அரண்மனை வளாகத்தில் இருக்கும் யானைகளுக்கும் சேர்த்து நடைபயிற்சி அளிக்கப்படும்.

மேலும் தசரா விழாவிற்கு ஒரு வாரத்திற்கு முன்பே அனைத்து யானைகளுக்கும் வெடிகுண்டு சத்தம், அதனுடைய வாசனை பயிற்சி அளிக்கப்படும். மேலும், யானைகளுக்கு தினமும் உடல் பரிசோதனை, குளிப்பாட்டுதல், மற்றும் யானைகளுக்கு பிடித்த உணவு வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.


Next Story