இந்தியாவில் கண்டறியபட்ட அபூர்வமான டைனோசர் முட்டைகள்


இந்தியாவில் கண்டறியபட்ட அபூர்வமான டைனோசர் முட்டைகள்
x

Image credit: www.nature.com

தினத்தந்தி 13 Jun 2022 11:07 AM GMT (Updated: 13 Jun 2022 11:20 AM GMT)

மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் வித்தியாசமான டைனோசர் முட்டைகள் கண்டறியப்பட்டு உள்ளன.

போபால்

மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் வித்தியாசமான டைனோசர் முட்டைகள் ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. டெல்லி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் இதை கண்டறிந்துள்ளனர்.

மத்தியப் பிரதேசத்தின் தார் மாவட்டத்தில் உள்ள டோனோசர் தேசிய பூங்காவில் பல்கலைக்கழக மாணவர்கள் ஆராய்ச்சியில் ஈடுபட்டனர். அப்போது டைட்டானோசர் என்ற வகையான டைனோசர்களின் முட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில் சில புதிய தகவல்கள் வெளிவந்துள்ளன.

நேச்சர் குரூப் என்ற இதழில் இந்த ஆராய்ச்சிக் கட்டுரை வெளியாகியுள்ளது. அதில், தேசிய பூங்காவில் புதிய வகை டைனோசர் முட்டைகள் மொத்தம் 52 கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அந்த கூடுகளில் ஒரு கூட்டில் 10 முட்டைகள் இருப்பது தெரியவந்துள்ளது. இதில் இதுவரை இல்லாத வித்தியாசமான முட்டைகளும் அடக்கம். இந்த வகை முட்டைகள் ஒன்றின் மீது ஒன்றாக அடுக்கப்பட்டு, அருகருகே வைக்கப்பட்டுள்ளன. இதுவரை டைனோசர் முட்டைகளில் பார்த்திராத அம்சம் இது. முட்டைகளுக்குள் முட்டை இருக்கும் முறை பறவைகளில் தான் காணப்படுமே தவிர, ஊர்வனவற்றில் இதுவரை காணப்பட்டது இல்லை.

எனவே, இந்த புதிய வகை கண்டுபிடிப்பு டைனோசரின் இனப்பெருக்கம், கூடு கட்டும் முறை உள்ளிட்டவை குறித்து புதிய வித ஆராய்ச்சிகள் மேற்கொள்ள உதவும்.

இது தொடர்பாக இந்த ஆய்வு கட்டுரையை எழுதிய பேராசிரியரான டாக்டர் ஹர்ஷா திமான் கூறியதாவது:-

டைட்டானோசர் புதிய வகை கூடுகள் மற்றும் முட்டைகள் மூலம் டைனோசர்களுக்கு முதலை அல்லது பறவைகளின் தன்மை இருந்திருக்கலாம். அவற்றை போலவே இவற்றின் குணாதிசயம் இருந்திருக்கலாம் என அறியப்படுகிறது. இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த கண்டுபிடிப்பாகும் என கூறினார்.

இதன் மூலம் இந்தியாவின் மத்திய மற்றும் மேற்கு பிராந்தியங்களில் உள்ள டைனோசர் எச்சங்களை தீவிரமாக ஆய்வு செய்யும் போது மிக முக்கியத்துவம் வாய்ந்த தகவல்கள் கிடைக்கும் என ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.


Next Story