சட்டவிரோதமாக தங்கியுள்ள வெளிநாட்டினர் மீது நடவடிக்கை; போலீசாருக்கு மந்திரி அரக ஞானேந்திரா உத்தரவு


சட்டவிரோதமாக தங்கியுள்ள வெளிநாட்டினர் மீது நடவடிக்கை;  போலீசாருக்கு மந்திரி அரக ஞானேந்திரா உத்தரவு
x

தட்சிண கன்னடா மாவட்டத்தில், சட்டவிரோதமாக தங்கியுள்ள வெளிநாட்டினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீஸ் மந்திரி அரக ஞானேந்திரா உத்தரவிட்டுள்ளார்.

மங்களூரு;

ஆலோசனை கூட்டம்

மாநில போலீஸ் மந்திரி அரக ஞானேந்திரா, மங்களூருவுக்கு நேற்றுமுன்தினம் மாலை வந்தார். இதைதொடர்ந்து அவர், மஙகளூரு மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் உயர் போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தினார்.

இந்த கூட்டம் முடிந்ததும் மந்திரி அரக ஞானேந்திரா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

பெங்களூருவில் தங்கியுள்ள வெளிநாட்டினர் குறித்து கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் சிலர் விசா முடிந்தும், போலி ஆவணங்கள் வைத்துகொண்டு சட்டவிரோதமாக தங்கியிருந்தது தெரியவந்தது. அவர்களை போலீசார் கைது செய்தனர்.

இதேபோல் தட்சிண கன்னடா மாவட்டம் முழுவதும் தங்கியுள்ள வெளிநாட்டினர் குறித்து கணக்கெடுப்பு நடத்தி சட்டவிரோதமாக தங்கி இருப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேநேரத்தில் வெளிநாட்டினர் போலி ஆவணங்கள் வைத்துள்ளார்களா என்று சோதனை நடத்த வேண்டும்.

சட்டம் ஒழுங்கு சீராக உள்ளது

இந்த கணக்கெடுப்பு விவரங்கள் அடங்கிய அறிக்கையை 2 வாரத்திற்குள் சமர்ப்பிக்க உத்தரவிட்டுள்ளேன். தட்சிண கன்னடா மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு சீராக உள்ளது. மேலும் குற்ற வழக்குகளில் சாட்சிகள் மாற வாய்ப்புள்ளது. இதுபோன்ற வழக்குகளை திறம்பட கையாள, அரசு வக்கீல்களுடன் ஒருங்கிணைந்து போலீசார் செயல்படவேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். இந்த கூட்டத்தில் மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி. தேவஜோதி ராய், மங்களூரு போலீஸ் கமிஷனர் சசிகுமார், தட்சிண கன்னடா போலீஸ் சூப்பிரண்டு ரிஷிகேஷ் பகவான் சோனாவனே ஆகியோர் கலந்துகொண்டனர்.


Next Story