மணல் கடத்தலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்; அதிகாரிகளுக்கு, கலெக்டர் ராஜேந்திரா உத்தரவு


மணல் கடத்தலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்; அதிகாரிகளுக்கு, கலெக்டர் ராஜேந்திரா உத்தரவு
x

தட்சிண கன்னடா மாவட்டத்தில் நடைபெறும் மணல் கடத்தலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

மங்களூரு;

மணல் கடத்தல்

தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு அருகே பங்ரகுளூர் கிராமத்தில் பல்குனி ஆறு ஓடுகிறது. இந்த ஆற்றங்கரையில் சட்டவிரோதமாக இரவு நேரங்களில் மணல் கடத்தல் நடப்பதாக புகார்கள் வந்தன. ஆனால் மாவட்ட நிர்வாகம் தரப்பிலும் போலீசார் தரப்பிலும் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் இந்த மணல் கடத்தலை தடுக்கவேண்டும் என்று மாவட்ட கலெக்டரிடம் பொதுமக்கள் சிலர் நேரடியாக புகார் அளித்துள்ளனர். இதுகுறித்து பங்ரகுளூர் கிராமத்தை சேர்ந்த டிசோசா என்பவர் கூறும்போது:-

கலெக்டரிடம் புகார்

பல்குனி ஆற்று பகுதியில் கடந்த 15 நாட்களாக இரவு நேரங்களில் மர்ம நபர்கள் சிலர் சட்டவிரோதமாக லாரிகள், பொக்லைன் எந்திரங்கள் உதவியுடன் மணல் கடத்தலில் ஈடுபடுகின்றனர். இதுகுறித்து அதிகாரிகளிடம் புகார் அளித்தால் அரசியல் புள்ளிகள் தலையிட்டு ஒன்றும் இல்லாமல் செய்துவிடுகின்றனர். மேலும் புகார் அளிப்பவர்களுக்கு மிரட்டலும் வருகிறது.

இந்த மணல் கடத்தலுக்கு பின்னர் பெரிய கும்பல் செயல்பட்டு வருகிறது. அவர்களை அடையாளம் கொண்டு நடவடிக்கை எடுப்பதுடன், மணல் கடத்தலை தடுக்கவேண்டும். அப்போதுதான் மண் வளம் காக்கப்படும். இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று மாவட்ட கலெக்டரிடம் நேரடியாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

நடவடிக்கை எடுங்கள்

இந்த நிலையில் இந்த புகாரை ஏற்ற மாவட்ட கலெக்டர் ராஜேந்திரா, மங்களூரு மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதியில் நடைபெறும் மணல் கடத்தலை கண்காணித்து நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

மேலும் அலட்சியமாக செயல்பட்டால் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.


Next Story