டெல்லியில் அதிரடி சோதனை: ஆயுத சட்டத்தின் கீழ் 26 பேர் கைது; துப்பாக்கி, பணம், போதை பொருள் பறிமுதல்


டெல்லியில் அதிரடி சோதனை:  ஆயுத சட்டத்தின் கீழ் 26 பேர் கைது; துப்பாக்கி, பணம், போதை பொருள் பறிமுதல்
x

டெல்லி போலீசார் நடத்திய அதிரடி சோதனையின் முடிவில் ஆயுத சட்டத்தின் கீழ் 26 பேரை கைது செய்து துப்பாக்கி, பணம், போதை பொருட்களை கைப்பற்றினர்.

புதுடெல்லி,

இந்தியாவில் சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் கும்பலை சேர்ந்தவர்களின் வீடு உள்ளிட்ட இடங்களில் டெல்லி போலீசார் இன்று காலை அதிரடி சோதனை நடத்தினர்.

வெளிநாடுகளில் இருந்து கொண்டு, இந்தியாவில் உள்ள சிலரை தங்களது கட்டுக்குள் வைத்து, வேலைக்கு அமர்த்தி சட்டவிரோத செயல்களில் சிலர் ஈடுபட்டு வருகின்றனர் என உளவு தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுபற்றி டெல்லி போலீசார் வெளியிட்டு உள்ள செய்தியில், டெல்லி மற்றும் அரியானாவில் உள்ள 20 இடங்களில் துவாரகா மாவட்ட போலீசார் காலை முதலே அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

சட்டவிரோத கும்பலுடன் தொடர்புடைய நபர்களின் இடங்களில் இந்த சோதனை நடந்தது. இதில், பல்வேறு இடங்களில் இருந்து ஆயுதங்கள், பணம் மற்றும் சட்டவிரோத பொருட்களை கைப்பற்றி உள்ளனர். சிலர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

டெல்லியின் சோனிபத் மற்றும் ஜஜ்ஜார் உள்ளிட்ட சில இடங்களிலும் இந்த சோதனை நடந்தது என துவாரகா துணை காவல் ஆணையாளர் ஹர்சவர்தன் கூறியுள்ளார். வெளிநாடுகளில் உள்ள கும்பல்கள் மற்றும் அவர்களது கூட்டாளிகளின் இடங்களில் துவாரகா போலீசார் சோதனை நடத்தினர்.

டெல்லியில் ஓரிடத்தில் ரூ.20 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதவிர, ஜஜ்ஜார் மற்றும் அரியானாவின் பிற இடங்களில் இருந்து ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன. தொடர்ந்து தேடுதல் வேட்டை நடந்து வருகிறது. பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் விவரங்களை டெல்லி போலீசார் சேகரித்து வருகின்றனர் என்று அவர் கூறினார்.

இந்த தொடர் சோதனையில், துப்பாக்கி குண்டு துளைக்காத கார் ஒன்று, 3 கைத்துப்பாக்கிகள், 7 சுற்றுகள் கொண்ட தோட்டாக்கள், போதை பொருட்களான 22.4 கிராம் ஹெராயின், 73 கிராம் ஆம்பிடமைன் மற்றும் ரூ.20 லட்சம் பணம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன என துவாரகா துணை காவல் ஆணையாளர் ஹர்சவர்தன் கூறியுள்ளார்.

இதனை தொடர்ந்து, ஆயுத சட்டம் மற்றும் போதை பொருள் ஒழிப்பு சட்டம் ஆகியவற்றின் கீழ் பல்வேறு குற்றங்களுக்காக போலீசார் 20 பேரை பிடித்தும், 6 பேரை கைது செய்தும் அழைத்து சென்று உள்ளனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தப்பட உள்ளது.


Next Story