பள்ளி, கல்லூரி அருகே புகையிலை விற்பனை செய்தால் நடவடிக்கை; கலெக்டர் சதீஸ் கடும் எச்சரிக்கை


பள்ளி, கல்லூரி அருகே புகையிலை விற்பனை செய்தால் நடவடிக்கை; கலெக்டர் சதீஸ் கடும் எச்சரிக்கை
x

குடகில் பள்ளி, கல்லூரி அருகே புகையிலை விற்பனை செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் சதீஸ் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

குடகு;


குடகு மாவட்டம் மடிகேரி கலெக்டர் அலுவலகத்தில் சுகாதாரத்துறை மற்றும் குடும்ப நலத்துறை சார்பில் புகையிலையை ஒழிப்பது குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்திற்கு தலைமை தாங்கி பேசிய மாவட்ட கலெக்டர் சதீஸ் கூறியதாவது:- 18 வயதிற்குட்பட்டவர்கள் அதிகளவு புகையிலை, போதை பொருட்களுக்கு அடிமையாகியுள்ளனர்.

இதனை தடுக்கவேண்டியது மாவட்ட நிர்வாகத்தின் கடமை. பள்ளி, கல்லூரி அருகே 100 மீட்டர் முதல் 300 மீட்டர் வரை புகையிலை பொருட்கள் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை மீறும் கடையின் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். கல்வி நிறுவனங்களுக்குள் புகையிலைப் பொருட்களை பயன்படுத்தக்கூடாது.

மாணவர்கள் புகையிலையை பயன்படுத்துவது தெரிந்தால் கல்வி நிறுவன தலைவர் மற்றும் நிர்வாக குழுவினர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். அரசு அலுவலகம், பள்ளி, கல்லூரி மற்றும் பொதுஇடங்களில் புகையிலை தடை செய்யப்பட்ட பகுதி என்று பதாகை வைத்திருக்கவேண்டும்.

மேலும் புகையிலையை பயன்படுத்திவிட்டு பொது இடங்களில் எச்சில் துப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். கே.எஸ்.ஆர்.டி.சி பஸ் நிலையம், ரெயில் நிலையங்களில் புகையிலை விற்பனை செய்ய கூடாது. இதனை ரெயில்வே துறையை சேர்ந்த அதிகாரிகள், போக்குவரத்து கட்டுப்பாட்டாளர்கள் கண்காணித்து நடவடிக்கை எடுக்கவேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story