நடிகர் அம்பரீஷ்-சுமலதா எம்.பி. மகன் அபிஷேக்-அவிவா திருமணம் பெங்களூருவில் நடந்தது


நடிகர் அம்பரீஷ்-சுமலதா எம்.பி. மகன் அபிஷேக்-அவிவா திருமணம் பெங்களூருவில் நடந்தது
x

நடிகர் அம்பரீஷ்-சுமலதா எம்.பி. ஆகியோரின் மகனும், நடிகருமான அபிஷேக்கிற்கு பெங்களூருவில் திருமணம் நடைபெற்றது.

பெங்களூரு:-

திருமணம் நடந்தது

மறைந்த நடிகர் 'ரெபல் ஸ்டார்' அம்பரீஷ்-சுமலதா எம்.பி. ஆகியோரின் மகனான நடிகர் அபிஷேக்கிற்கும், பிரபல ஆடை வடிவமைப்பாளர் ஸ்ரீபிரசாத் பித்தப்பாவின் மகள் அவிவாவுக்கும் திருமணம் நிச்சயப்பட்டு இருந்தது. அதன்படி அவர்களின் திருமணம் பெங்களூரு அரண்மனையில் நேற்று நடைபெற்றது. முன்னாள் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, கிரிக்கெட் வீரர் அனில் கும்ப்ளே, நடிகை சுமலதா முன்னிலையில் இந்த திருமணம் நடந்தது.

இதில் நடிகர்கள் ரஜினிகாந்த், மோகன்பாபு, யஷ், சுதீப், மஞ்சு மனோஜ், நரேஷ், நடிகைகள் பாரதி விஷ்ணவர்தன், ராதிகா பண்டிட், மேக்னா ராஜ், சுகாஷினி, பவித்ரா, தயாரிப்பாளர் அஸ்வினி புனித் ராஜ்குமார் உள்பட பலரும் நேரில் கலந்து கொண்டு புதுமண தம்பதிக்கு வாழ்த்து கூறினர். இதில் தனது குடும்பத்தினருடன் வந்து கலந்து கொண்ட நடிகர் சுதீப், திருமண பரிசாக அபிஷேக்கிற்கு தங்கச்சங்கிலியை வழங்கினார். மேலும் மணமக்களுடன் நின்று அவர் 'செல்பி' புகைப்படமும் எடுத்துக் கொண்டார். அபிஷேக்கும், அவிவா பித்தப்பாவும் லண்டனில் கல்வி பயின்ற போது காதலிக்க தொடங்கினர். கடந்த 5 ஆண்டுகளாக அவர்கள் 2 பேரும் காதலித்து வந்தனர். இதையடுத்து இருவீட்டாரும் அவர்களுக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர். இவர்களின் திருமண நிச்சயதார்த்தம் கடந்த ஆண்டு(2022) டிசம்பர் மாதம் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

வரவேற்பு நிகழ்ச்சி

இவர்களின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி வருகிற 7-ந் தேதி பெங்களூருவில் உள்ள அரண்மனை மைதானத்தில் நடைபெற உள்ளது. அதில் முதல்-மந்திரி சித்தராமையா உள்பட அரசியல் தலைவர்கள், கன்னட, தமிழ், தெலுங்கு திரையுலக நட்சத்திரங்கள் என ஏராளமானவர்கள் கலந்துக்கொள்ள உள்ளனர்.

அதைத்தொடர்ந்து வருகிற 16-ந் தேதி சொந்த ஊரான மண்டியாவில் சைவ-அசைவ உணவு விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் ஒரு லட்சம் பேர் பங்கேற்று உணவு சாப்பிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story