பஜ்ரங்தள அமைப்பு தடை விவகாரம்; ஒரு அமைப்பை தடை செய்வது என்பது பிடிக்கவில்லை நடிகர் ரம்யா பரபரப்பு பேட்டி


பஜ்ரங்தள அமைப்பு தடை விவகாரம்; ஒரு அமைப்பை தடை செய்வது என்பது பிடிக்கவில்லை நடிகர் ரம்யா பரபரப்பு பேட்டி
x
தினத்தந்தி 5 May 2023 5:15 AM IST (Updated: 5 May 2023 5:15 AM IST)
t-max-icont-min-icon

பஜ்ரங்தள அமைப்பு தடை விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த நடிகை ரம்யா, ஒரு அமைப்பை தடை செய்வது என்பது பிடிக்கவில்லை என்றார்.

மண்டியா,

கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால், பஜ்ரங்தள அமைப்புக்கு தடைவிதிக்கப்படும் என்று அறிவித்துள்ளது. இதற்கு ஒட்டுமொத்தமாக பா.ஜனதா, இந்து அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். பிரதமர் மோடியும் காங்கிரசின் அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், ஜெய் பஜ்ரங் பாலி என முழக்கமிட்டு வருகிறார்.

இந்த நிலையில், பஜ்ரங்தள அமைப்பு தடை விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.பி.யும், அக்கட்சியின் நட்சத்திர பேச்சாளருமான நடிகை ரம்யா மண்டியா மாவட்டம் பன்னூரில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட அவரிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது அவர் கூறியதாவது:-

தனிப்பட்ட முறையில் எனக்கு தடை என்ற பெயர் பிடிக்கவில்லை. ஒன்று தடை செய்தால் மற்றொன்று வரும். வெறுப்பு பேச்சுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க சட்டம் உள்ளது. வெறுப்பு பேச்சுகள் பேசுபவர்களுக்கு எதிராக போலீசார் பொறுப்பேற்று புகார் பதிவு செய்ய வேண்டும் என்றும், அதை நடைமுறைப்படுத்தவும் கோர்ட்டு பரிந்துரைத்து உள்ளது. இவ்வாறு நிலைமை இருக்க ஒரு அமைப்பை தடை செய்ய இடமில்லை.

நாம் ஜனநாயக அமைப்பில் இருக்கிறோம். சட்டத்தை கடைப்பிடிப்பது முக்கியம். சட்டத்தை அமல்படுத்துவோம் என்று சொல்வதற்கு பதிலாக பஜ்ரங்தள அமைப்புக்கு தடை என்று சொன்னது போல் இருக்கிறது. நான் தேர்தல் அறிக்கையை முழுமையாக பார்க்கவில்லை.

மக்கள் மத்தியில் எனது பிரசாரத்திற்கு ஆதரவு கிடைத்து வருகிறது. நான் மோட்டார் சைக்கிளில் வந்தேன். மக்கள் நிறைய அன்பும், மரியாதையும் கொடுத்தார்கள். ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. கோபி, டீ பீடா எல்லாம் கொடுத்தார்கள். இந்த தேர்தலில் காங்கிரஸ் ஜெயிக்கும் என்கிற நம்பிக்கை இருக்கிறது. வருணா தொகுதியில் சித்தராமையா வெற்றி பெறுவார்.

பெரிய தலைவர் சித்தராமையா முதல்-மந்திரியாக இருந்த போது பல நல்ல திட்டங்களை செயல்படுத்தி உள்ளார். அவர் நல்ல மனிதர். லிங்காயத் முதல்வர் என்று சித்தராமையா கூறவில்லை. பசவராஜ்பொம்மையை தான் ஊழல் முதல்-மந்திரி என்று கூறினார்.

இவ்வாறு நடிகை ரம்யா கூறினார்.


Next Story