நடிகை சேத்தனா ராஜ் மரணம்:பிரேத பரிசோதனை அறிக்கை வந்ததும் டாக்டர்களிடம் விசாரணை
நடிகை சேத்தனா ராஜ் மரணம் அடைந்த விவகாரத்தில் பிரேத பரிசோதனை அறிக்கை வந்ததும் டாக்டர்களிடம் விசாரணை நடத்தப்படும் என்று போலீஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.
பெங்களூரு: நடிகை சேத்தனா ராஜ் மரணம் அடைந்த விவகாரத்தில் பிரேத பரிசோதனை அறிக்கை வந்ததும் டாக்டர்களிடம் விசாரணை நடத்தப்படும் என்று போலீஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.
நடிகை சேத்தனா மரணம்
பெங்களூரு புறநகர் மாவட்டம் வீரேனபாளையா கிராமத்தை சேர்ந்தவர் சேத்தனா ராஜ். இவர், சின்னத்திரை நடிகை ஆவார். கீதா, தோரேசானி, ஒலவின நில்தன உள்ளிட்ட சின்னத்திரை தொடர்களில் சேத்தனா ராஜ் நடித்து வந்தார். இந்த நிலையில், கடந்த 16-ந் தேதி ராஜாஜிநகரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் உடல் பருமனை குறைக்க, கொழுப்பு அறுவை சிகிச்சையை நடிகை சேத்தனா ராஜ் செய்து கொண்டார். அப்போது அவர் பரிதாபமாக உயிர் இழந்தார். அவரது மரணம் சின்னத்திரை நடிகைகள் மத்தியில் ஆதங்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில், நடிகை சேத்தனா ராஜ் மரணம் குறித்து, அவரது தந்தை வரதராஜ் சுப்பிரமணியநகர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் தனியார் மருத்துவமனைகளின் டாக்டர்களின் அலட்சியமே தனது மகளின் சாவுக்கு காரணம் என்று கூறி இருந்தாா். இதையடுத்து, சுப்பிரமணியநகர் போலீசார், நடிகை சேத்தனா ராஜ் இயற்கைக்கு மாறாக மரணம் அடைந்திருப்பதாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதே நேரத்தில் நடிகை சேத்தனா ராஜ் மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் இருப்பதால், அவரது பிரேத பரிசோதனை அறிக்கைக்காக போலீசார் காத்திருக்கின்றனர்.
பிரேத பரிசோதனை அறிக்கை
இதுபற்றி போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், நடிகை சேத்தனா ராஜின் பிரேத பரிசோதனை அறிக்கை இன்னும் கிடைக்கவில்லை. பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்ததும், அது இந்திய மருத்துவ மையத்திற்கு அனுப்பி வைக்கப்படும். அவர்கள், போலீசாருக்கு ஒரு அறிக்கையை அனுப்பி வைப்பார்கள்.
அந்த அறிக்கையில் அறுவை சிகிச்சை செய்த டாக்டர் ஏதேனும் தவறு செய்திருப்பது தெரியவந்தால், சம்பந்தப்பட்ட டாக்டர்கள் விசாரணைக்கு ஆஜராக நோட்டீசு அனுப்பி வைக்கப்படும். விசாரணையின் போது டாக்டர்கள் தவறு செய்திருப்பது தெரியவந்தால், அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.