சித்தராமையாவுக்கு ஆதரவாக நடிகை ரம்யா, நடிகர் துனியா விஜய் பிரசாரம்


சித்தராமையாவுக்கு ஆதரவாக நடிகை ரம்யா, நடிகர் துனியா விஜய் பிரசாரம்
x

சித்தராமையாவிற்கு ஆதரவாக மல்லிகார்ஜூன கார்கே, டி.கே.சிவகுமார் வரவில்லை. ஆனால் நடிகை ரம்யா, நடிகர் துனியா விஜய் ஆகியோர் தேர்தல் பிரசாரம் செய்வார்கள்.

மைசூரு:-

கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா வருணா தொகுதியில் போட்டியிடுகிறார். இது தான் எனது கடைசி தேர்தல் என அவர் அறிவித்து தேர்தல் களத்தில் குதித்துள்ளார். அவரை வீழ்த்த பா.ஜனதா கட்சி மந்திரி வி.சோமண்ணாவை வேட்பாளராக நிறுத்தியுள்ளது. இந்த நிலையில் சித்தராமையாவை ஆதரித்து யார்-யார் பிரசாரம் மேற்கொள்ள இருக்கிறார்கள் என்பது குறித்து யதீந்திரா நேற்று நிருபர்களிடம் கூறினார். அப்போது அவர் கூறியதாவது:-

வருணா தொகுதியில் கடந்த 10 நாட்களாக நான் பிரசாரம் செய்து வருகிறேன். மக்கள் சித்தராமையாவுக்கு ஆதரவாக உள்ளனர். சித்தராமையா ஆட்சியில் செய்த நலத்திட்டங்களையும், வளர்ச்சிப் பணிகளையும் மக்கள் மனதில் வைத்துள்ளனர். பா.ஜனதாவின் தவறான ஆட்சியால் மக்கள் சோர்வடைந்துள்ளனர். இது இந்த தேர்தலில் எதிரொலிக்கும்.

எனது தந்தை ஆட்சியில் ஊழல், முறைகேடு இல்லை. இதனால் சாதி ரீதியில் வீழ்த்த பா.ஜனதாவினர் சித்தராமையா மீது குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார்கள். பா.ஜனதாவின் ஐ.டி. பிரிவு என்பது, பொய்களின் கூடாரம். சித்தராமையாவை லிங்காயத்துக்கு எதிரானவர் என முத்திரை குத்த முயற்சி செய்கிறார்கள். எனது தந்தையை ஆதரித்து பிரசாரம் செய்ய நடிகை ரம்யா, நடிகர் துனியா விஜய் ஆகியோர் வர உள்ளனர். ஆனால் அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் வருணாவில் பிரசாரம் செய்ய இதுவரை திட்டம் இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story