நடிகை ரம்யா தேர்தல் பிரசாரம் எப்போது?


நடிகை ரம்யா தேர்தல் பிரசாரம் எப்போது?
x

காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு ஆதரவாக நடிகை ரம்யா எப்போது தேர்தல் பிரசாரம் செய்வார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

பெங்களூரு:-

கன்னட திரையுலகின் முன்னணி நடிகையாக இருந்த திவ்யா என்கிற திவ்ய ஸ்பந்தனா காங்கிரசில் இணைந்தார். பின்னர் மண்டியா நாடாளுமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட்டு எம்.பி. ஆனார். அதன்பின்னர் காங்கிரசில் தேசிய அளவில் தீவிர அரசியலில் ஈடுபட்டார். பின்னர் திடீரென்று காங்கிரசில் இருந்து விலகி இருந்தார். அரசியலில் நுழைந்த அவர் திரைப்படங்களில் நடிப்பதை நிறுத்திக்கொண்டார். இந்த நிலையில் நடிகை ரம்யா கன்னட திரைப்படத்தை தயாரித்து, புதிய அவதாரம் எடுத்துள்ளார். திரை நட்சத்திரமாக நடிகை ரம்யாவை காங்கிரஸ் கட்சி நட்சத்திர பேச்சாளராக அறிவித்துள்ளார். பா.ஜனதா சார்பில் நடிகர் சுதீப் பிரசாரத்தை தொடங்கிவிட்டார். ஆனால் காங்கிரஸ் சார்பில் நட்சத்திர பேச்சாளராக அறிவிக்கப்பட்ட நடிகை ரம்யா இன்னும் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபடவில்லை. அவரை பழைய மைசூரு பகுதியான மண்டியா, மைசூரு, துமகூரு, ராமநகர் மற்றும் பெங்களூருவில் உள்ள தமிழர்கள் வாழும் பகுதிகளில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட வைக்க காங்கிரஸ் கட்சி திட்டமிட்டுள்ளது. அநேகமாக அவர் மே 1-ந்தேதி முதல் காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபடுவார் என தகவல் வெளியாகியுள்ளது.


Next Story