நடிகை துனிஷா சர்மா தற்கொலை வழக்கு விசாரணை சரியாக நடக்கிறதா? போலீசாருக்கு ஐகோர்ட்டு கேள்வி


நடிகை துனிஷா சர்மா தற்கொலை வழக்கு விசாரணை சரியாக நடக்கிறதா? போலீசாருக்கு ஐகோர்ட்டு கேள்வி
x

நடிகை துனிஷா சர்மா தற்கொலை வழக்கு விசாரணை சரியாக நடக்கிறதா என போலீசாருக்கு மும்பை ஐகோர்ட்டு கேள்வி எழுப்பி உள்ளது.

மும்பை

நடிகை துனிஷா சர்மா (வயது21) 'அலிபாபா : தஸ்தான்-இ-காபூல்' என்ற டி.வி. தொடரில் நடித்து வந்தார். கடந்த ஆண்டு டிசம்பர் 24-ந் தேதி டி.வி. தொடர் படப்பிடிப்பு பால்கர் மாவட்டம் வசாய் பகுதியில் நடந்தது. படப்பிடிப்பு நடந்து கொண்டு இருந்த போது துனிஷா சர்மா அங்குஉள்ள கழிவறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்தார். அவரை தற்கொலைக்கு தூண்டியதாக சக நடிகர் சீசான் கானை (27) போலீசார் கைது செய்தனர். அவர் நீதிமன்ற காவலில் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார்.

சீசான் கான் மும்பை ஐகோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்து உள்ளார். அந்த மனுவில், அவர் தன் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும் என கூறியுள்ளார். ஜெயிலில் இருந்து விடுவிக்க இடைக்கால உத்தரவு பிறப்பிக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார். இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் ரேவதி மோகிதே, பி.கே.சவான் அடங்கிய அமர்வு முன் நடந்தது. அப்போது போலீஸ் தரப்பில் ஆஜரான வக்கீல், " சம்பவம் நடந்த அன்று நடிகை, சீசான் கானின் அறைக்கு மகிழ்ச்சியாக செல்கிறார். ஆனால் திரும்பி வந்த போது நடிகை சோகமாக காணப்பட்டது கண்காணிப்பு கேமரா காட்சிகளில் பதிவாகி உள்ளது " என்றார். அப்போது சீசான் தரப்பு வக்கீல், போலீசார் வழக்கை தொடர்ந்து விசாரிக்கலாம், ஆனால் அதற்கு சீசான் கான் சிறையில் இருக்க வேண்டிய தேவையில்லை என தெரிவித்தார்.

இதையடுத்து நீதிபதிகள், நடிகை தற்கொலை வழக்கு விசாரணை சரியாக நடக்கிறதா? என கேள்வி எழுப்பினர். அவர்கள், " விசாரணை சரியான பாதையில் நடத்தப்படுகிறதா?. தற்கொலைக்கு எது தூண்டியது என்பதை பார்ப்பது தான் முக்கியம். ஆனால் புகார் தாரரின் (துனிஷா சர்மா தாய்) வாக்குமூலத்தில் முகாந்திரம் இல்லை. " என்றனர். பின்னர் மனு மீதான விசாரணையை வருகிற 17-ந் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.


Next Story