அதானி விவகாரம்; அமைதியாக இருக்கும்படி மிரட்டுகின்றனர்: காங்கிரஸ் மூத்த தலைவர் பரபரப்பு குற்றச்சாட்டு


அதானி விவகாரம்; அமைதியாக இருக்கும்படி மிரட்டுகின்றனர்:  காங்கிரஸ் மூத்த தலைவர் பரபரப்பு குற்றச்சாட்டு
x

அதானி விவகாரத்தில் அமைதியாக இருக்கும்படி நாங்கள் மிரட்டப்படுகிறோம் என காங்கிரஸ் கட்சியின் எம்.பி. மற்றும் மூத்த தலைவரான ஜெய்ராம் ரமேஷ் குற்றச்சாட்டு கூறியுள்ளார்.


புதுடெல்லி,


கவுதம் அதானியின் நிறுவனங்களுக்கு எதிராக அமெரிக்காவின் ஹிண்டன்பர்க் சந்தை ஆய்வு நிறுவனம் பல்வேறு மோசடி குற்றச்சாட்டுகளை எழுப்பி அறிக்கை வெளியிட்டது.

இதன் எதிரொலியாக, நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடரில் அதானி விவகாரம் எதிரொலித்தது. நாடாளுமன்ற கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய ராகுல் காந்தி, தொழிலதிபர் அதானியின் சொத்துகளின் வானளாவிய அதிகரிப்புக்கு மோடி அரசே காரணம் என்ற பொருளில் குற்றம் சாட்டி பேசினார். இதற்கு பா.ஜ.க. தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

இந்த சூழலில், நேற்று அவை கூடியதும் அதானி விவகாரம் பற்றி விவாதிக்க கோரி எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டனர். இதனால், மேலவை 2 முறை ஒத்தி வைக்கப்பட்டது.

2-வது முறையாக அவை தொடங்கியதும், அதானி விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டு குழு விசாரணை தேவை என எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தனர். இதனால், அவையில் மீண்டும் கூச்சலும், குழப்பமும் நிலவியது.

இதனை தொடர்ந்து, எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால் நாடாளுமன்ற மேலவை வருகிற மார்ச் 13-ந்தேதி வரை ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது. இதனால், பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது பகுதி வருகிற மார்ச் 13-ந்தேதி நடைபெறும் என அவை தலைவர் தங்கார் அறிவிப்பு வெளியிட்டார்.

இந்நிலையில், மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா செய்தியாளர்களுக்கு இன்று அளித்த பேட்டியில் கூறும்போது, அதானி விவகாரம் சுப்ரீம் கோர்ட்டின் விசாரணையில் உள்ளது. அதனால் அதுபற்றி விமர்சிப்பது முறையல்ல. ஆனால், ஹிண்டன்பர்க்-அதானி விவகாரத்தில் பா.ஜ.க. பயப்படவோ, மறைப்பதற்கோ எதுவும் இல்லை என கூறியுள்ளார்.

இதற்கு பதிலளிக்கும் வகையில் பேசிய காங்கிரஸ் எம்.பி. ஜெய்ராம் ரமேஷ், அதானி விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டு குழு விசாரணை தேவை என்ற எங்களது கோரிக்கையில் இருந்து மத்திய அரசு தப்பி ஓடுவது ஏன்? மறைப்பதற்கு ஒன்றும் இல்லை என்றால் பின்னர் ஏன் அவர்கள் தயக்கம் காட்டுகின்றனர்?

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நாங்கள் எழுப்பிய கேள்விகளை அவர்கள் நீக்கி உள்ளனர். நாங்கள் அமைதியாக இருக்கும்படி மிரட்டப்பட்டு வருகிறோம் என்று அவர் குற்றச்சாட்டு தெரிவித்து உள்ளார்.


Next Story