அதானி விவகாரம்: நாடாளுமன்றத்திற்கு வெளியே எதிர்க்கட்சி எம்.பி.க்கள் மனித சங்கிலி போராட்டம்


அதானி விவகாரம்: நாடாளுமன்றத்திற்கு வெளியே எதிர்க்கட்சி எம்.பி.க்கள் மனித சங்கிலி போராட்டம்
x

அதானி விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டு குழு விசாரணை வேண்டும் என வலியுறுத்தி நாடாளுமன்றத்திற்கு வெளியே எதிர்க்கட்சி எம்.பி.க்கள் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.



புதுடெல்லி,


நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது அமர்வு தொடங்கி இன்றுடன் 4-வது நாள் ஆகிறது. கடந்த 3 நாட்களாக இரு அவைகளிலும் ராகுல் காந்தி மற்றும் தொழிலதிபர் அதானி விவகாரம் ஆகியவற்றை ஆளும், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எழுப்பி கோஷங்களை எழுப்பினர்.

இதனால், தொடர்ந்து அவை நடவடிக்கைகள் ஒத்தி வைக்கப்படும் சூழல் ஏற்பட்டது. இதேபோன்று, 4-வது நாளான இன்று அவை கூடியதும், இங்கிலாந்து நாட்டில் ராகுல் காந்தி பேசிய விவகாரம் பற்றி ஆளுங்கட்சியும், தொழிலதிபர் அதானி விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டு குழு விசாரணை வேண்டும் என வலியுறுத்தி எதிர்க்கட்சியினரும் கோஷம் எழுப்பி அமளியில் ஈடுபட்டனர்.

இரு அவைகளிலும் இன்றும் தொடர் அமளியால் அவை நடவடிக்கைகள் மதியம் 2 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டன. அதானி விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டு குழு விசாரணை வேண்டும் என வலியுறுத்தி நாடாளுமன்றத்திற்கு வெளியே எதிர்க்கட்சி எம்.பி.க்கள் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதேபோன்று காங்கிரஸ் தொண்டர்கள், அதானி விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டு குழு விசாரணை வேண்டும் என கோரி டெல்லியில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இதற்கு முன் அவை நடவடிக்கையின்போது, திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள் தங்களது வாயில் கருப்பு துணியை கட்டியபடி, நாடாளுமன்ற மேலவையின் மைய பகுதிக்கு வந்து ஆர்ப்பாட்டம் செய்தனர். மக்களவையிலும் இதேபோன்ற நிலை காணப்பட்டது.

எதிர்க்கட்சிகளை பா.ஜ.க. மந்திரிகள் மற்றும் எம்.பி.க்கள் பேச அனுமதிப்பதே இல்லை. எதிர்க்கட்சிகளை பேச விடுவதே இல்லை என்று எம்.பி.க்கள் கோஷமிட்டனர்.

இதனால், நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் மதியம் 2 மணிவரை ஒத்தி வைக்கப்பட்டன. 2 மணிக்கு பின்னரும் இந்த போராட்டம் நடைபெறும் என எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கூறினர்.


Next Story