ஆன்லைன் விளையாட்டில் அடிமை; நகை கடையில் பொம்மை துப்பாக்கியுடன் கொள்ளையில் ஈடுபட்ட நபர்


ஆன்லைன் விளையாட்டில் அடிமை; நகை கடையில் பொம்மை துப்பாக்கியுடன் கொள்ளையில் ஈடுபட்ட நபர்
x

Image Courtesy:  Indiatoday

ஆன்லைன் விளையாட்டுக்கு அடிமையான நபர், கடனை அடைக்க நகை கடையில் பொம்மை துப்பாக்கியுடன் கொள்ளையில் ஈடுபட்டு உள்ளார்.



புதுடெல்லி,



டெல்லியின் ஷாலிமார் பாக்கில் அம்பேத்கார் நகர் பகுதியை சேர்ந்த நபர் ரின்கு ஜிண்டால் (வயது 36). இவர், 2019-ம் ஆண்டு மார்ச்சில் பிரசாந்த் விகார் பகுதியில் வங்கி கொள்ளையில் ஈடுபட்ட குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு பின் அதே ஆண்டு டிசம்பரில் விடுவிக்கப்பட்டார்.

ஜிண்டாலுக்கு வருவாய் எதுவும் இல்லாத நிலையில், ஆன்லைன் விளையாட்டில் மூழ்கி போனார். அதற்கு அடிமையான அவர், பணம் தேவை என்பதற்காக பழைய தொழிலுக்கு திரும்பியுள்ளார். இதன்படி, கைக்குட்டையால் முகமூடி போன்று அணிந்து கொண்டு, நகை கடை ஒன்றிற்குள் புகுந்து உள்ளார்.

கடை உரிமையாளர், பணியாளர்கள் அனைவரும் கடையில் இருந்தபோது, துப்பாக்கி முனையில் 10 தங்கி சங்கிலிகள் மற்றும் ரூ.20 ஆயிரம் பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து விட்டு, தப்பியோடி விட்டார்.

இதுபற்றி உரிமையாளர் அனுராக் கார் தகவல் அளித்ததன் பேரில், சம்பவ பகுதிக்கு வந்த போலீசாருக்கு சி.சி.டி.வி. காட்சிகளே கைகொடுத்துள்ளது. அவரது இடது கையில் பிளாஸ்டிக் பை ஒன்றும், வலது கையில் துப்பாக்கியும் இருந்துள்ளது.

எனினும், ரிக்சாவில் ஏறி போனவர் போக்குவரத்து நெரிசலில் அடையாளம் காணமுடியாத சூழலில் தப்பி சென்றார். பின்னர் உளவு தகவல்கள் உள்ளிட்டவற்றின் அடிப்படையில் ஒரு வார காலம் தொடர் முயற்சியின் பயனாக, கடந்த 25-ந்தேதி அவரை கைது செய்தனர்.

அவரிடம் இருந்து 7 தங்க சங்கிலிகள் மீட்கப்பட்டன. 76 கிராம் கொண்ட ஒரு செயினை அடகுக்கு வைத்து, ரூ.2.6 லட்சம் பெற்றுள்ளார். அவற்றில் ரூ.1.5 லட்சம் தொகையை ஆன்லைன் விளையாட்டில் இழந்து விட்டார்.

இதுபோக, மீதமுள்ள தொகையை போலீசார் கைப்பற்றினர். சம்பவத்தன்று ஜிண்டால் அணிந்திருந்த ஆடைகள், காலணிகள் மற்றும் பொம்மை துப்பாக்கி ஆகியவற்றை சோதனையில் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.


Next Story