நாளை விண்ணில் பாயும் ஆதித்யா எல்-1 விண்கலம்: பரமேஸ்வரி கோவிலில் இஸ்ரோ தலைவர் சோமநாத் சாமி தரிசனம்


நாளை விண்ணில் பாயும் ஆதித்யா எல்-1 விண்கலம்: பரமேஸ்வரி கோவிலில் இஸ்ரோ தலைவர் சோமநாத் சாமி தரிசனம்
x

ஆந்திர மாநிலம் திருப்பதியில் உள்ள செங்காலம்மா பரமேஸ்வரி கோவிலில் இஸ்ரோ தலைவர் சோமநாத் சாமி தரிசனம் செய்தார்.

திருப்பதி,

சந்திரயான்-3 திட்டத்தின் வெற்றியை தொடர்ந்து இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் சூரியனை ஆராயும் பணியில் இறங்கியுள்ளது. பூமியில் இருந்து 15 கோடி கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சூரியனை பற்றிய ஆய்வை, இதுவரை அமெரிக்கா, ஐரோப்பா, ஜெர்மனி ஆகிய நாடுகளை சேர்ந்த விண்வெளி நிறுவனங்களே மேற்கொண்டிருக்கின்றன. அந்த வகையில், சூரியன் பற்றிய ஆய்வில், தற்போது 4-வது நாடாக இந்தியா இணையப் போகிறது.

ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து நாளை பகல் 11.50 மணிக்கு பி.எஸ்.எல்.வி. சி-57 ராக்கெட் மூலம் ரூ.423 கோடி செலவில் விண்ணில் ஏவப்படும் 'ஆதித்யா எல்-1' விண்கலம்தான் இந்த புதிய சாதனையை நிகழ்த்தப்போகிறது. சுமார் 400 கிலோ எடை கொண்ட இந்த விண்கலம், சூரியனின் வெளிப்புற வெப்பச் சூழல், கதிர் வீச்சு, காந்தப் புலம் உள்ளிட்ட பல்வேறு ஆய்வுகளை மேற்கொள்ள இருக்கிறது. நாளை காலை 11.50 மணிக்கு ஆதித்யா எல்-1 விண்கலம் ஏவப்படவுள்ள நிலையில் தற்போது கவுண்டவுன் தொடங்கி உள்ளது.

இந்நிலையில், ஆதித்யா எல்-1 விண்கலம் நாளை விண்ணில் ஏவப்படவுள்ளதை முன்னிட்டு, ஆந்திர மாநிலம் திருப்பதியில் உள்ள செங்காலம்மா பரமேஸ்வரி கோவிலில் இஸ்ரோ தலைவர் சோமநாத் சாமி தரிசனம் செய்தார். சாமி தரிசனத்துக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த இஸ்ரோ தலைவர் சோமநாத், "ஆதித்யா எல்1-க்கு பிறகு, எங்களின் அடுத்த இலக்கு ககன்யான் திட்டம். இதன் பணிகள் அக்டோபர் முதல் வாரத்தில் தொடங்கப்படும்." சந்திரயான்-3 தொடர்பான லேண்டர், ரோவர் நிலவில் வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது என்றார்.


Next Story