ஆனேக்கல் கவுன்சிலர்கள் தகுதி நீக்க வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை ஒத்திவைப்பு
ஆனேக்கல் கவுன்சிலர்கள் தகுதி நீக்க வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
பெங்களூரு: பெங்களூரு நகர மாவட்டத்தில் ஆனேக்கல் புரசபை உள்ளது. அந்த புரசபைக்கு கடந்த 2019-ம் ஆண்டு தேர்தல் நடைபெற்றது. இதில் போட்டியிட்டு சீனிவாஸ், லலிதா, ஹேமலதா ஆகிய 3 பேர் வெற்றி பெற்றனர். அவர்கள் தங்களின் தேர்தல் செலவுகளை 30 நாட்களுக்குள் தாக்கல் செய்யவில்லை. இதையடுத்து மாநில தேர்தல் ஆணையம், அவர்கள் மூன்று பேரையும் தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டது.
இதை எதிர்த்து அவர்கள் 3 பேரும் கர்நாடக ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். அவர்களின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளனர். இந்த மனு சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வக்கீல் மீனாட்சி அரோரா, கவுன்சிலர்கள் மூன்று பேரும் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்று வாதிட்டார். இந்த வாதத்தை கேட்ட நீதிபதிகள், விசாரணையை வருகிற ஜூலை மாதம் 25-ந் தேதிக்கு ஒத்திவைத்தனர். அந்த 3 வார்டுகளுக்கும் இடைத்தேர்தல் வருகிற 19-ந் தேதி நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.