அ.தி.மு.க. - பா.ஜனதா கூட்டணி தொடருகிறது -எடப்பாடி பழனிசாமி பேட்டி


அ.தி.மு.க. - பா.ஜனதா கூட்டணி தொடருகிறது -எடப்பாடி பழனிசாமி பேட்டி
x

அ.தி.மு.க. - பா.ஜனதா இடையே கூட்டணி தொடருகிறது, அண்ணாமலை யுடன் எந்த தகராறும் இல்லை என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

புதுடெல்லி,

சமீப காலமாக தமிழக பா.ஜனதா தலைமைக்கும், அ.தி.மு.க.வின் சில தலைவர்களுக்கும் இடையே வார்த்தை மோதல் வலுத்து வந்தது. இதனால் பா.ஜனதா கூட்டணியில் அ.தி.மு.க. நீடிக்குமா? என்ற சந்தேகம் ஏற்பட்டது.

அமித்ஷாவுடன் சந்திப்பு

இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று முன்தினம் டெல்லி சென்று உள்துறை மந்திரி அமித்ஷா மற்றும் பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோரை நேரில் சந்தித்து பேசினார்.

இந்த சந்திப்பின்போது தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை உடனிருந்தார்.

இதற்கிடையே டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் எடப்பாடி பழனிசாமி நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

கூட்டணி தொடருகிறது

மத்திய மந்திரி அமித்ஷாவை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினோம். இது சம்பிரதாயமான சந்திப்புதான். நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு காலம் உள்ளது.

ஏற்கனவே 2019 நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா கூட்டணியில் அங்கம் வகித்தோம். அந்த கூட்டணி 2021 சட்டசபை தேர்தல் மற்றும் ஈரோடு இடைத்தேர்தலிலும் தொடர்ந்தது. எனவே பா.ஜனதாவுடன் கூட்டணி தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

எந்த தகராறும் கிடையாது

எனக்கும், அண்ணாமலைக்கும் கருத்து மோதல் இருக்கிறது என்பது தவறான கருத்து. எந்த தகராறும் கிடையாது. தகராறு இருந்தால் ஈரோடு இடைத்தேர்தலில் அவர் எப்படி பிரசாரம் செய்வார்?. எந்த கூட்டணியாக இருந்தாலும் அவரவர் கட்சி வளர வேண்டும் என்றுதான் பார்ப்பார்கள். நாங்களும் அப்படித்தான்.

எங்கள் கூட்டணியில் எல்லா கட்சிகளும் சுதந்திரமான கட்சிகள். தி.மு.க. போல அடிமை கட்சிகள் அல்ல. இப்போதுதான் அத்தி பூத்தது மாதிரி 12 மணிநேர வேலை திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார்கள்.

அ.தி.மு.க. விவகாரத்தில் நீதிமன்ற தீர்ப்பு வந்துள்ளது. தேர்தல் கமிஷனும் முழுமையான தீர்ப்பை தந்துவிட்டது.

அமைச்சர் ஆடியோ விவகாரம்

தமிழக நிதி அமைச்சர் பழனிவேல்தியாகராஜன் பேசியதாக வெளியான ஆடியோ விவகாரத்தையும் அமித்ஷாவிடம் நாங்கள் முன்வைத்தோம். அதிர்ச்சியூட்டும் தகவல்கள் அந்த ஆடியோவில் வந்து இருக்கிறது. ரூ.30 ஆயிரம் கோடி ஊழல் நடந்திருப்பதாக ஒரு நிதி அமைச்சரே சொல்லி இருக்கிறார்.

இதில் சபரீசன், உதயநிதி ஸ்டாலின் ஆகியோரது பெயரையும் சொல்லி இருக்கிறார். ரூ.30 ஆயிரம் கோடியை வைத்துக்கொண்டு என்ன செய்வதென்று தெரியாமல் இருக்கிறார்கள் என்ற செய்தி அதிலே வெளிப்படுகிறது. அதன் தொடர்ச்சியாக 2-வது ஆடியோவும் வந்து இருக்கிறது.

எனவே, இதனை முழுமையாக விசாரிக்க வேண்டும். மத்திய அரசு ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும், இதுபற்றிய உண்மை நாட்டு மக்களுக்கு தெரிய வேண்டும் என உள்துறை மந்திரியிடம் வலியுறுத்தினோம்.

அவர் ஏற்கனவே தனது கவனத்துக்கு வந்துவிட்டதாக சொன்னார். இது ஒரு மாநிலத்தின் பிரச்சினை அல்ல. நாட்டின் பிரச்சினை. ரூ.30 ஆயிரம் கோடி என்பது சாதாரணமானது அல்ல. நிதி அமைச்சரே இதை பேசியது பற்றி முதல்-அமைச்சர் இதுவரை பதில் சொல்லவில்லை. அதனால்தான் சந்தேகம் வருகிறது. எனவே விசாரிக்க வேண்டும் என வலியுறுத்தி இருக்கிறோம்.

முறைகேடு இல்லை

சி.ஏ.ஜி. அறிக்கையில் அ.தி.மு.க. ஆட்சியில் முறைகேடு என எதுவும் சொல்லப்படவில்லை. நிதி திருப்பி அனுப்பப்பட்டது, பயன்படுத்தப்படவில்லை என்றுதான் சொல்லப்பட்டு உள்ளது.

கொரோனா காலம் என்பதால் கட்டுப்பாடுகள் காரணமாக எந்த பணியும் செய்ய முடியவில்லை. ஆனால் தி.மு.க. ஆட்சியில் ரூ.28 ஆயிரம் கோடியை அவர்கள் செலவு செய்யவில்லை.

கோடநாடு சம்பவம்

கோடநாடு வழக்கு பற்றி சட்டசபையிலேயே பேசிவிட்டேன். கோடநாடு சம்பவம் நடந்தது, அதை கண்டுபிடித்தது, குற்றவாளிகளை கைது செய்தது, வழக்கு தொடர்ந்தது என அனைத்தும் அ.தி. மு.க. ஆட்சியில் மேற்கொள்ளப்பட்டது. பின்னர் கொரோனா காலத்தில் ஓராண்டு காலம் கோர்ட்டு நடைபெறவில்லை. சாட்சிகள் வெளிமாநிலத்துக்கு சென்றுவிட்டனர். அவர்களை கண்டுபிடித்து மீண்டும் விசாரணை நடத்தப்பட்டது. கிட்டத்தட்ட அது முடியும் நிலைக்கு வந்துவிட்டது.

அடுத்து வாதம், தொடர்ந்து தீர்ப்பு. இதுதான் நிலைமை. இந்த நிலையில் ஆட்சி மாற்றம் வந்தது. தற்போது மு.க.ஸ்டாலின் அந்த விவகாரத்தை தொடங்கி வைத்திருக்கிறார். வழக்கு போட்டு குற்றவாளிகளை கைது செய்தது நாங்கள்.

அவர்களை ஜாமீனில் எடுத்தது தி.மு.க. கேரளாவில் பல கொடுங்குற்றங்களை செய்தவர்களுக்கு தி.மு.க.வினர் எப்படி ஜாமீன் தரலாம். ஏதோ சம்பந்தம் இருக்கிறது. அதனால்தான் இந்த வழக்கில் உண்மைத்தன்மை தெரியவேண்டும் என்றால் சி.பி.ஐ. விசாரணை தேவை என்கிறோம்.

இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பதில் அளித்தார்.

பேட்டியின்போது முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, முனுசாமி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

பின்னர் எடப்பாடி பழனிசாமி விமானம் மூலம் டெல்லியில் இருந்து கோவை புறப்பட்டு சென்றார்.


Next Story