சிக்பள்ளாப்பூரில் அணை சுவரில் ஏறி சாகச முயற்சி; வாலிபர் தவறி விழுந்து படுகாயம்


சிக்பள்ளாப்பூரில் அணை சுவரில் ஏறி சாகச முயற்சி; வாலிபர் தவறி விழுந்து படுகாயம்
x

சிக்பள்ளாப்பூரில் அணை சுவரில் ஏறி சாகச செய்ய முயற்சி வாலிபர் தவறி விழுந்து படுகாயமடைந்தார்.

மாவட்ட செய்திகள்

சிக்பள்ளாப்பூர்:

சிக்பள்ளாப்பூர் அருகே சீனிவாச சாகர் அணைக்கட்டு உள்ளது. இந்த அணைக்கட்டின் சுற்றுச்சவர் கற்களால் ஆனது. இந்த நிலையில் அந்த அணைக்கட்டு நிரம்பி வருகிறது. இதை பார்த்து ரசிக்க தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். அதுபோல் விடுமுறை நாளான நேற்று முன்தினமும் ஏராளமானோர் அந்த அணையை கண்டு ரசித்து கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் அந்த அணையின் சுவரில் கவுரிபித்தனூரை சேர்ந்த ஒரு வாலிபர் ஏறி சாகசம் நிகழ்த்த முடிவு செய்தார். அதன்படி அவர் சுவரில் எந்த உபகரணங்கள் துணையின்றி ஏறினார்.

அணையில் நீர் நிரம்பி சுவரில் வழிந்தோடியபடி இருந்தது. ஆனால் அதனை பொருட்படுத்தாமல் வாலிபர் அணை சுவரில் ஏறியபடி இருந்தார். இதனை அவரது நண்பர்கள் செல்போனில் வீடியோ படம் பிடித்து கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் திடீரென்று கால் தவறி அந்த வாலிபர் கீழே விழுந்தார். இதையடுத்து அவர் அப்பகுதியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும் வாலிபர் அணைக்கட்டு சுவரில் ஏறும் காட்சிகளும், தவறி விழும் காட்சிகளும் அடங்கிய வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதுதொடர்பாக சிக்பள்ளாப்பூர் புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story