பஸ்-ஆட்டோக்களில் குழந்தைகள் உதவி மையம் குறித்து விளம்பரம்


பஸ்-ஆட்டோக்களில் குழந்தைகள் உதவி மையம் குறித்து விளம்பரம்
x

பஸ், ஆட்டோக்களில் குழந்தைகளில் உதவி மையம் குறித்து விளம்பரம் செய்ய வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

பெங்களூரு-

பொம்மைகள் விற்பனை

பெங்களூருவில் உள்ள கர்நாடக ஐகோர்ட்டில் பெங்களூருவை சேர்ந்த குழந்தைகள் உரிமை அறக்கட்டளை ஒரு மனுவை தாக்கல் செய்தது. அதில் குழந்தைகள் நகரங்களின் முக்கிய சந்திப்புகளில் பொம்மைகள் விற்பனை செய்வதை தடுக்கும்படி மாநில அரசுக்கு உத்தரவிடுமாறு கோரியது. அந்த மனு மீது விசாரணை நடைபெற்றது வருகிறது. இந்த நிலையில் அந்த மனு ஐகோர்ட்டில் தலைமை நீதிபதி பி.பி.வரலே தலைமையிலான அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது தலைமை நீதிபதி பி.பி.வரலே பேசும்போது கூறியதாவது:-

குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு குறித்து விவாதிக்க கர்நாடக மாநில சட்ட சேவைகள் ஆணையத்தின் மேற்

பார்வையில் அரசு ஒரு கூட்டத்தை கூட்ட வேண்டும். இதில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள், அமைப்புகள், குழந்தைகளின் பாதுகாப்புக்காக பணியாற்றி வரும் அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்துகொள்ள வேண்டும். நாங்கள் ஏற்கனவே, குழந்தைகள் பொம்மைகள் உள்ளிட்ட பொருட்களை விற்பனை செய்வதை தடுக்க நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டோம்.

குழந்தைகள் உதவி மையம்

கடந்த 2021-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 18-ந் தேதி உத்தரவுப்படி ஒரு கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. மாநில அரசும், எடுத்த நடவடிக்கைகள் குறித்து ஒரு அறிக்கையை தாக்கல் செய்துள்ளது. ஆனால் பொம்மைகளை விற்கும் குழந்தைகளின் மறுவாழ்வுக்கு என்ன திட்டங்கள் அமல்படுத்தப்படுகிறது என்பது குறித்து அரசு தெரிவிக்கவில்லை.

கர்நாடக ஐகோர்ட்டு வளாகத்திலேயே இந்த கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்படும். இதற்கான ஏற்பாடுகளை கோர்ட்டு பதிவாளர் மேற்கொள்ள வேண்டும் என்று உத்தரவிடுகிறோம். மெட்ரோ ரெயில்கள் உள்பட பல்வேறு பொது இடங்களில் குழந்தைகள் உதவி மைய தொடர்பு எண்கள் விளம்பரம் செய்யப்படுவதாக அரசு தனது அறிக்கையில் கூறியுள்ளது.

மக்களிடம் விழிப்புணர்வு

மைசூரு தசரா விழா நடைபெற்றபோதும் இதுகுறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தியதாக அரசு சொல்கிறது. பஸ், ஆட்டோக்களிலும் குழந்தைகள் உதவி மையம் குறித்து தகவல்களை விளம்பரம் செய்ய வேண்டும். இந்த விளம்பர தகவல்களை மக்களுக்கு தெரிவிக்கும் பணியை இன்னும் தீவிரமாக மேற்கொள்ள வேண்டும்.

தொலைக்காட்சி சேனல்கள், கேபிள் டி.வி. சேனல்கள், பிற தனியார் தொலைக்காட்சி சேனல்களில் தினமும் குழந்தைகள் உதவி மையம் குறித்து தகவல்களை விளம்பரம் செய்ய வேண்டும். இதை அரசு கண்காணிக்க வேண்டும். சிக்னல்களில் குழந்தைகள் பொம்மைகள் உள்ளிட்ட பிற பொருட்களை விற்பனை செய்வது என்பது அரசியல் சாசனத்திற்கு எதிரானது.

இவ்வாறு நீதிபதி பி.பி.வரலே கூறினார்.


Related Tags :
Next Story