விளம்பரம், மக்களை கவர்வதில் கவனம்... அரசு பணி நடைமுறையில் ஓட்டை; மத்திய அரசை சாடிய மல்லிகார்ஜூன கார்கே


விளம்பரம், மக்களை கவர்வதில் கவனம்... அரசு பணி நடைமுறையில் ஓட்டை; மத்திய அரசை சாடிய மல்லிகார்ஜூன கார்கே
x

ரெயில்வே துறையில் பாதுகாப்பு ஆலோசனைகளை அமல்படுத்தாமலும், தண்டவாள புதுப்பித்தலுக்கான நிதி ஒதுக்கீட்டை குறைத்தும் உள்ளது என மத்திய அரசை காங்கிரஸ் குறை கூறியுள்ளது.

புதுடெல்லி,

ஒடிசாவில் ஏற்பட்ட ரெயில் விபத்து நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவில் பெங்களூரு, சென்னை எக்ஸ்பிரஸ் ரெயில்கள் உள்பட 3 ரெயில்கள் அடுத்தடுத்து மோதி விபத்தில் சிக்கின. இந்த கோர விபத்தில் சிக்கி 275 பயணிகள் உயிரிழந்துள்ளனர்.

ரெயில் விபத்தில் மீட்பு பணிகள் முடிந்து, மறுசீரமைப்பு பணிகள் நடந்து வருகின்றன. வருகிற புதன்கிழமைக்குள் பணிகள் நிறைவடைந்து, ரெயில்களை மீண்டும் இயக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என மத்திய ரெயில்வே மந்திரி அஷ்வினி வைஷ்ணவ் கூறியுள்ளார்.

இந்நிலையில், காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே வெளியிட்ட டுவிட்டர் செய்தியில், சுதந்திர இந்தியாவில் ஏற்பட்ட மிக பயங்கர ரெயில் விபத்தில், மோடி அரசுக்கு கேள்விகள். விளம்பரம் செய்வதிலும் மற்றும் மக்களை கவர்வதிலும் உள்ள கவனம், அரசு பணியை செய்வதில் ஓட்டை ஏற்படுத்தி விட்டது என தெரிவித்து உள்ளார்.

தொடர்ந்து அவர், 3 லட்சம் காலி பணியிடங்கள் ரெயில்வே துறையில் உள்ளன. பெரிய அதிகாரிகளுக்கான பணியிடங்களும் காலியாக உள்ளன.

பிரதமர் அலுவலகமே பணிக்கு ஆட்களை தேர்வு செய்கிறது. 9 ஆண்டுகளில் ஏன் அவர்கள் பணியிடங்களை நிரப்பவில்லை? என கார்கே கேள்வி எழுப்பி உள்ளார்.

சமீபத்தில் ரெயில்வே வாரியம் கூட கூறும்போது, ரெயில் ஓட்டுனர்கள் பற்றாக்குறையால் அவர்கள் நீண்டநேரம் பணியில் ஈடுபடுகின்றனர். இது விபத்து எண்ணிக்கை அதிகரிப்பதற்கான முக்கிய காரணம் என ஒப்பு கொண்டு உள்ளது. பின்னர் ஏன் காலி பணியிடங்கள் நிரப்பப்படவில்லை? என அவர் கேட்டு உள்ளார்.

ரெயில்வே துறையில் பாதுகாப்புக்கான ஆலோசனைகளை அமல்படுத்தவில்லை என குற்றச்சாட்டு கூறியதுடன், தண்டவாள புதுப்பித்தலுக்கான நிதி ஒதுக்கீட்டை குறைத்தும் உள்ளது என மத்திய அரசை காங்கிரஸ் குறை கூறியுள்ளது.


Next Story