லிவ் இன் காதலன் மனைவியுடன் சென்றதால் ஆத்திரம்; காதலனின் மகனை கழுத்தை நெரித்து கொன்ற இளம்பெண்
திருமணம் ஆன நபருடன் இளம் பெண் லிவ் இன் முறையில் வாழ்ந்து வந்துள்ளார்.
டெல்லி,
டெல்லியின் இந்திரபுரி பகுதியை சேர்ந்தவர் ஜிதேந்தர். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் திவ்யன்ஷ் (வயது 11) என்ற மகன் உள்ளார்.
இதனிடையே, கடந்த 2019-ம் ஆண்டு கருத்து வேறுபாடு காரணமாக ஜிதேந்தர் தன் மனைவி மற்றும் மகனை விட்டு பிரிந்து பூஜா குமாரி (வயது 24) என்ற இளம்பெண்ணுடன் லிவ் இன் முறையில் வாழ்ந்து வந்தார்.
2019ம் ஆண்டு அக்டோபர் 17ம் தேதி பூஜா குமாரியை ஜிதேந்தர் கோவிலில் வைத்து திருமணம் செய்துகொண்டார். ஆனால், திருமணத்தை பதிவு செய்யவில்லை. மேலும், தன் முதல் மனைவிக்கு விவாகரத்தும் கொடுக்கவில்லை.
ஆனாலும், கடந்த 3 ஆண்டுகளாக பூஜா குமாரியுடன் ஜிதேந்தர் லிவ் இன் முறையில் வாழ்ந்து வந்தார். அவ்வப்போது தன் முதல் மனைவியை விவாகரத்து செய்யும்படி ஜிதேந்தரிடம் பூஜா குமாரி வலியுறுத்தி வந்தார். இதனால் இருவருக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பாட்டுள்ளது.
இந்த சூழ்நிலையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் லிவ் இன் முறையில் வாழ்ந்து வந்த பூஜா குமாரியை விட்டு பிரிந்த ஜிதேந்தர் தன் முதல் மனைவி மற்றும் மகனுடன் சேர்ந்தார். ஜிதேந்தர் கடந்த சில மாதங்களாக தன் மனைவி மற்றும் மகனுடன் வாழ்ந்து வந்தார்.
ஆனால், ஜிதேந்தரை மீண்டும் அடைய நினைத்த பூஜா குமாரி, ஜிதேந்தர் மனைவிக்கு விவாகரத்து கொடுக்க மறுப்பதற்கு அவரின் 11 வயது மகன் திவ்யன்ஷ்- தான் காரணம் என நினைத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஜிதேந்தரின் மகன் திவ்யனை கொலை செய்ய திட்டமிட்டார்.
இதற்காக, ஜிதேந்தருக்கும் தனக்கும் பழக்கம் உள்ள நண்பர் மூலம் ஜிதேந்தர் தன் குடும்பத்துடன் தங்கியுள்ள வீட்டின் முகவரியை பூஜா குமாரி அறிந்துகொண்டார்.
பின்னர், கடந்த 10ம் தேதி ஜிதேந்தரின் வீட்டிற்கு சென்ற பூஜா குமாரி வீட்டில் ஜிதேந்தரின் மகன் திவ்யன்ஷ் மட்டுமே இருப்பதை அறிந்தார். திவ்யன்ஷ் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த நிலையில் அந்த அறைக்கு சென்ற பூஜா குமாரி சிறுவன் திவ்யன்ஷை கழுத்தை நெரித்து கொலை செய்தார்.
பின்னர் திவ்யன்ஷின் உடலை மெத்தையின் அடியில் துணிகள் வைக்கும் அறையில் அடைத்துவைத்துவிட்டு அங்கிருந்து தப்பியோடிவிட்டார்.
வெகுநேரம் கழித்து வீட்டிற்கு வந்த ஜிதேந்தர் மற்றும் அவரது மனைவி தூக்கிகொண்டிருந்த மகனை காணவில்லை என்பதை உணர்ந்தனர். மேலும், மேத்தையில் துணிகள் வைக்கும் அறையில் இருந்து துணிகள் வெளியே கிடப்பதை கண்டு சந்தேகமடைந்த அவர்கள் அந்த அறையை திறந்து பார்த்தனர்.
அப்போது, அந்த அறையில் மகன் திவ்யன்ஷ் பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
சிறுவனை கொலை செய்தது யார் என தெரியாமல் போலீசார் திணறி வந்த நிலையில் 300க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர். அப்போது, முகத்தை மூடிக்கொண்டு ஒரு பெண் ஜிதேந்தரின் வீட்டிற்குள் செல்வதும் பின்னர் வெளியேறுவதும் சிசிடிவி கேமராவில் பதிவானது. அந்த காட்சிகளின் அடிப்படையில் 300க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து சம்பவம் நடந்து 3 நாட்கள் கழித்து பூஜா குமாரியை போலீசார் இன்று கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட பூஜா குமாரி சிறையில் அடைக்கப்பட்டார். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. லிவ் இன் காதலன் விட்டு சென்றதால் அவரின் மகனை இளம்பெண் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.