'கோவின்' தளத்தை தொடர்ந்து தொடர் தடுப்பூசி பணிகளுக்காக 'யு-வின்' இணையதளம் தொடக்கம்
‘கோவின்’ தளத்தை தொடர்ந்து தொடர் தடுப்பூசி பணிகளுக்காக ‘யு-வின்’ இணையதளம் தொடங்கப்பட்டது.
புதுடெல்லி,
இந்தியாவில் கொரோனா தடுப்பூசி பணிகளை நிர்வகிப்பதற்காக கோவின் இணையதளம் உருவாக்கப்பட்டது. இதன் மூலம் கொரோனா தடுப்பூசி நடவடிக்கைகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டதுடன், சர்வதேச அளவிலும் இந்த இணையதளம் வரவேற்பை பெற்றது. இதைத்தொடர்ந்து பிறந்த குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிகள் போன்றவர்களுக்கான தொடர் தடுப்பூசி நடவடிக்ைககளுக்காக புதிய இணையதளத்தை மத்திய அரசு உருவாக்கி இருக்கிறது.
இந்தியாவின் சர்வதேச தடுப்பூசி திட்டத்தை டிஜிட்டல் மயமாக்கும் இந்த இணையதளத்துக்கு 'யு-வின்' என பெயரிடப்பட்டு உள்ளது.
இது பரிசோதனை முயற்சியாக அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் தலா 2 மாவட்டங்களில் தொடங்கப்பட்டு இருக்கிறது.
இதன் மூலம் கர்ப்பிணிகள் மற்றும் பிறந்த குழந்தைகளுக்கு டிஜிட்டல் பதிவு, அடுத்தடுத்த தடுப்பூசி நினைவூட்டல் போன்ற அனைத்து பணிகளும் மேற்கொள்ளப்படும்.
அனைத்து தடுப்பூசிகளும் போடப்பட்டதும் பயனாளர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும். அதை அவர்கள் பதிவிறக்கமும் செய்து கொள்ள முடியும்.
இந்த தகவலை மத்திய சுகாதார அமைச்சக அதிகாரிகள் தெரிவித்தனர்.