டெல்லியில் உலுக்கிய மற்றொரு விபத்து 3 மாணவிகள் மீது கார் மோதியது; ஒருவர் கவலைக்கிடம்


டெல்லியில் உலுக்கிய மற்றொரு விபத்து 3 மாணவிகள் மீது கார் மோதியது; ஒருவர் கவலைக்கிடம்
x

டெல்லியில் உலுக்கிய மற்றொரு விபத்து கிரேட்டர் நொய்டாவில் 3 மாணவிகள் மீது கார் மோதியது. இதில் ஒருவர் நிலைமை கவலைக்கிடம்

புதுடெல்லி

டெல்லி அமன்விகார் பகுதியை சேர்ந்தவர் அஞ்சலி (வயது 23). தனியார் நிறுவன ஊழியர். திருமணம் மற்றும் சுப நிகழ்ச்சிகளுக்கு சென்று பணிபுரிந்து வந்தார்.

இதற்கிடையே புத்தாண்டையொட்டி டெல்லியில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள அஞ்சலி சென்றார். நிகழ்ச்சி முடிந்ததும் தனது ஸ்கூட்டியில் நேற்று முன்தினம் அதிகாலையில் வீடு திரும்பி கொண்டிருந்தார்.

டெல்லியின் சுல்தான்புரி பகுதியில் வந்தபோது எதிரே வந்த சொகுசு கார் ஒன்று ஸ்கூட்டர் மீது பயங்கரமாக மோதியது.

இதில் தூக்கி வீசப்பட்ட அஞ்சலி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அத்துடன் அவரது கால் காரின் டயரில் சிக்கியது.

இதன் பின்னரும் காரை நிறுத்ததாத டிரைவர், அந்த பெண்ணின் சடலத்தை சுமார் 4 கி.மீ. தூரத்துக்கு மேல் இழுத்துச்சென்று விட்டார். சுல்தான்புரியில் இருந்து கஞ்சவாலா பகுதி வரைக்கும் இந்த கொடூர செயலை அவர் அரங்கேற்றினார்.

கஞ்சவாலாவில் சிக்கிய அந்த காரில் இருந்து, இளம்பெண்ணின் உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அத்துடன் காரில் இருந்த 5 பேரை கைது செய்தனர்.

இப்போது இதேபோன்ற சம்பவத்தில் நொய்டா கிரேட்டர் பகுதியில் பி-டெக் மாணவர்கள் வேகமாக வந்த கார் மாணவிகள் மீது மோதியதால் மருத்துவமனையில் உயிருக்கு போராடி வருகிறார்கள். மூன்று மாணவிகளில் சுவீட்டி குமாரி என்ற மாணவி விபத்துக்குப் பிறகு கோமா நிலைக்குச் சென்றார், மற்ற இருவரும் பலத்த காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மாணவிகள் மீது காரை மோதி விட்டு லைமறைவான குற்றவாளிகளை கண்டுபிடிக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு உள்ளனர்.

சுவீட்டி தற்போது கிரேட்டர் நொய்டாவில் உள்ள கைலாஷ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

சுவீட்டியின் சகோதரர், அவர் கிரேட்டர் நொய்டாவில் உள்ள ஒரு கல்லூரியில் படிக்கும் மாணவி என்றும், ஐசியூவில் உயிருக்குப் போராடி வருவதாகவும் அவரது சமூக ஊடகக் கணக்கில் தெரிவித்தார்.

இதுவரை 1,00000 ரூபாய் செலவு செய்துள்ளதாக அவர் தெரிவித்தார். அவரது சிகிச்சைக்கு 10,00,000 ரூபாய் செலவாகும் என்பதால் அவர்களுக்கு கூடுதல் நிதி தேவை என கூறி உள்ளார்.

இதற்கிடையில், பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் பீட்டா-2 போலீஸ் நிலையத்தில் புகார் அளித்து உள்ளனர்.


Next Story