கடந்த 2017-ம் ஆண்டு கோழிக்கறி சாப்பிட்டுவிட்டு தசரா ஊர்வலத்தை சித்தராமையா தொடங்கிவைத்தார் - பா.ஜனதா புதிய குற்றச்சாட்டு


கடந்த 2017-ம் ஆண்டு கோழிக்கறி சாப்பிட்டுவிட்டு தசரா ஊர்வலத்தை சித்தராமையா தொடங்கிவைத்தார் - பா.ஜனதா புதிய குற்றச்சாட்டு
x

கோழிக்கறியை சாப்பிட்டுவிட்டு தசரா ஊர்வலத்தை சித்தராமையா தொடங்கிவைத்ததாக பா.ஜனதா புதிய குற்றச்சாட்டை கூறியுள்ளது.

பெங்களூரு:

சித்தராமையா

கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவராக இருந்து வருபவர் சித்தராமையா. காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இவர் முன்னாள் முதல்-மந்திரியும் ஆவார். இந்த நிலையில் கடந்த 15-ந் தேதி சிவமொக்காவில் சுதந்திர தின விழா நடந்தது. அப்போது ஒரு தரப்பினர் வீரசாவர்க்கரின் உருவப்படம் அடங்கிய பேனரை வைத்திருந்தனர்.

அதற்கு மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து அதை அகற்றினர். இதனால் இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

போலீஸ் தடியடி

இதையடுத்து போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். இச்சம்பவம் குறித்து விமர்சித்த சித்தராமையா, முஸ்லிம்கள் அதிகம் வாழும் பகுதியில் வீரசாவர்க்கரின் பேனரை வைத்தது ஏன்? என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு பா.ஜனதாவினர், இந்து அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து சித்தராமையாவுக்கு எதிராக போராட்டங்கள் நடத்தினர். மேலும் கடந்த சில நாட்களுக்கு முன்பு குடகு மாவட்டத்திற்கு சென்ற சித்தராமையாவின் கார் மீது முட்டை வீசி தாக்குதல் நடத்தினர்.

அசைவ உணவு சாப்பிட்டுவிட்டு...

மேலும் சிக்கமகளூருவுக்கு சென்ற சித்தராமையாவுக்கு பா.ஜனதாவினரும், பஜ்ரங்தள அமைப்பினரும் கருப்பு கொடி காட்டி போராட்டம் நடத்தினர்.

இந்த பரபரப்பு அடங்குவதற்குள் குடகில் உள்ள பசவேஸ்வரா கோவிலில் சித்தராமையா சாமி தரிசனம் செய்வதற்கு முன்பு கோழிக்கறி குழம்பு அடங்கிய அசைவ உணவு சாப்பிட்டதாகவும், அதன்பிறகே அவர் சாமி தரிசனம் செய்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதுவரை அவர் இந்த குற்றச்சாட்டை மறுக்கவில்லை.

பா.ஜனதாவினர் குற்றச்சாட்டு

இந்த நிலையில் சித்தராமையா முதல்-மந்திரியாக இருந்த கடந்த 2017-ம் ஆண்டு புகழ்பெற்ற தசரா விழா ஊர்வலத்தையே அசைவ உணவு (நாட்டுக்கோழிக்கறி குழம்பு) சாப்பிட்டுவிட்டு தான் தொடங்கி வைத்தார் என்றும், அசைவம் சாப்பிட்டுவிட்டு கோவிலுக்கு வந்து சித்தராமையா மக்களின் கடவுள் நம்பிக்கையை உடைத்துவிட்டார் என்றும் மைசூரு-குடகு தொகுதி பா.ஜனதா எம்.பி. பிரதாப் சிம்ஹா பகீர் குற்றச்சாட்டை கூறியுள்ளார்.

இந்த விவகாரம் குறித்து பா.ஜனதா எம்.எல்.ஏ. பசனகவுடா பட்டீல் யத்னால் கருத்து தெரிவிக்கையில், கோவில்களுக்கு செல்ல விரும்பினால் உள்ளூர் மரபுகளை சித்தராமையா கடைப்பிடிக்க வேண்டும். உள்ளூர் மக்களின் மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் நடந்து கொள்ள கூடாது. சித்தராமையாவுக்கு தைரியம் இருந்தால் பன்றி இறைச்சி சாப்பிட்டு மசூதிக்கு செல்ல வேண்டும் என்றார்.

கர்நாடக பா.ஜனதா துணை தலைவர் விஜயேந்திரா கூறும்போது, மக்கள் தங்கள் உண்ணும் உணவை தேர்ந்து எடுப்பதில் அவர்களுக்கு உரிமை இருக்கலாம். தென்மாநிலங்களில் பராம்பரியம் மற்றும் கலாசாரம் உள்ளது. இங்கு உள்ள நடைமுறைகளை மதித்து நடக்க வேண்டும். பொய் பதவிகளில் இருப்பவர் (சித்தராமையா) மக்கள் மனதை புண்படுத்தும் வகையில் நடந்து கொள்ள கூடாது என்றார்.

இழிவுபடுத்த முயற்சி

இந்த விவகாரம் குறித்து காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.சி. வீணா அச்சய்யா கூறும்போது, பிரதாப் சிம்ஹா கூறியுள்ள நாளில் சித்தராமையாவின் உணவில் அசைவம் இருக்கவில்லை. அவர் ராகி ரொட்டியை தான் சாப்பிட்டார் என்றார்.

சித்தராமையாவின் மகனும், எம்.எல்.ஏ.வுமான யதீந்திரா கூறும்போது, உணவை தேர்வு செய்வதில் அனைவருக்கும் உரிமை உள்ளது. பா.ஜனதா தேவையற்ற பிரச்சினைகளை உருவாக்கி வருகிறது என்றார்.

காங்கிரஸ் செயல் தலைவர் துருவநாராயண் கூறும்போது, மக்கள் பிரச்சினைகளில் கவனம் செலுத்தாத பா.ஜனதா அரசு தன் மீதான தோல்வியை மறைக்க சித்தராமையா மீது தேவையற்ற குற்றச்சாட்டுகளை கூறி வருகிறது. பொய் பிரசாரம் மூலம் சித்தராமையாவை இழிவுபடுத்த பா.ஜனதா முயற்சி செய்கிறது என்றார்.

கடவுள் பரிந்துரை செய்தாரா?

பிரதாப் சிம்ஹா எம்.பி. கருத்துக்கு பதில் அளித்து உள்ள சித்தராமையா, நான் ஒரு இடத்தில் மதிய உணவு சாப்பிட்டேன். இந்த உணவை தான் சாப்பிட வேண்டும் என்று கடவுள் பரிந்துரை செய்து உள்ளாரா?. இரவில் இறைச்சி சாப்பிட்டுவிட்டு மறுநாள் காலை கோவிலுக்கு செல்வதில் தவறு இல்லை என்றார்.


Next Story