விமானத்தில் சண்டை போட்ட பயணிகள்: சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்குப்பதிவு - மத்திய மந்திரி அறிவிப்பு


விமானத்தில் சண்டை போட்ட பயணிகள்: சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்குப்பதிவு - மத்திய மந்திரி அறிவிப்பு
x

பாங்காக்-இந்தியா விமானத்தில் சண்டையில் ஈடுபட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக விமான போக்குவரத்து துறை மந்திரி ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

பாங்காக்-இந்தியா விமானத்தில் சண்டையில் ஈடுபட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக விமான போக்குவரத்து துறை மந்திரி ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்துள்ளார். பாங்காக்கில் இருந்து இந்தியா வந்த நான்கு இந்திய பயணிகள் ஒன்று சேர்ந்து விமானத்தில் இருந்த இருந்த மற்றொரு இந்திய பயணியை தாக்கினர். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகின. இந்த நிலையில் இது போன்ற செயல்பாடுகளை ஏற்றுக்கொள்ள முடியாது என்று மத்திய மந்திரி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மத்திய மந்திரி ஜோதிராதித்யா வெளியிட்டுள்ள டுவிட்டர்பதிவில், "தாய்ஸ்மைல் ஏர்வே விமானத்தில் பயணிகளுக்கு இடையே நடந்த சண்டை தொடர்பாக, சம்பந்தப்பட்டவர்கள் மீது போலீஸ் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது போன்ற செயல்பாடுகள் ஏற்றுக்கொள்ள முடியாதது" என்று தெரிவித்துள்ளார்.

டிசம்பர் 26 அன்று தாய்லாந்தில் இருந்து கொல்கத்தா வந்த விமானம் புறப்படுவதற்கு முன்பு இந்த சண்டை நடந்ததாக தாய் ஸ்மைல் ஏர்வேஸ் தெரிவித்துள்ளது. கேபின் குழுவினரின் பாதுகாப்பு அறிவுறுத்தல்களின்படி, பயணிகளில் ஒருவர் தனது இருக்கையை சரிசெய்ய மறுத்துவிட்டார். இதையடுத்து பணியாளர்கள், அந்த பயணியிடம் இருக்கையை நீங்கள் சரிசெய்யாவிட்டால் வெளியேற்றத்தின் போது, உங்களுக்குப் பின்னால் உள்ள பயணிகள் வெளியேறுவதை உங்கள் இருக்கை தடுக்கும் என்று தெரிவித்தனர்.

இதையடுத்து பாதுகாப்பு விதிகளை பின்பற்றாத அந்த பயணியுடன் சக பயணிகள் சண்டையில் ஈடுபட்டனர். அந்த பயணி திருப்பி அடிக்கவில்லை, அவர்களை தடுக்க முயன்றார். விமானத்தில் இருந்த ஊழியர்களும் மற்றவர்களும் தாக்குதலை நிறுத்த முயன்றனர். இது தொடர்பான காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகின.

இந்த நிலையில் இதுகுறித்து விமான நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த சம்பவத்தில் பயணிகளுக்கு பெரிய காயம் எதுவும் ஏற்படவில்லை. சண்டையில் சம்பந்தப்பட்ட பயணிகள் யாருக்கும் விமானத்தில் மதுபானம் வழங்கப்படவில்லை. தொடர்ந்து பயணத்தில் வேறு எந்த இடையூறும் ஏற்படவில்லை. சண்டையை வீடியோ எடுத்த இரண்டு பயணிகளிடம் அவற்றை நீக்குமாறு கோரப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் இஸ்தான்புல்லில் இருந்து டெல்லி நோக்கி வந்த இண்டிகோ விமானத்தில் பணிப்பெண் ஒருவரை பயணி திட்டிய சம்பவம் வைரலானது குறிப்பிடத்தக்கது.


Next Story