அக்னி வீரர்களை வரவேற்கும் தொழிலதிபர்கள் - மஹிந்திரா வரிசையில் டாடா குழுமமும் அறிவிப்பு


அக்னி வீரர்களை வரவேற்கும் தொழிலதிபர்கள் - மஹிந்திரா வரிசையில் டாடா குழுமமும் அறிவிப்பு
x

Image Courtesy : PTI 

அக்னி வீரர்களை வரவேற்று ஆனந்த் மஹிந்திரா, ஹர்ஷ் கோயங்கா ஏற்கனவே டுவீட் செய்து இருந்தனர்.

புதுடெல்லி,

ராணுவத்துக்கு ஆள் சேர்க்க 'அக்னிபத்' என்ற புதிய திட்டத்தை கடந்த 14-ந் தேதி மத்திய அரசு அறிவித்தது. 4 ஆண்டுகளுக்கு மட்டும் ஒப்பந்த அடிப்படையில் இளைஞர்கள் சேர்க்கப்படுகிறார்கள். ஆனால், இந்த திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வடமாநிலங்களில் இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அக்னிபத் திட்டத்தை திரும்ப பெற வேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

இந்த எதிர்ப்புகளுக்கு மத்தியில் அக்னிபத் திட்டத்தை வரவேற்று மஹிந்திரா குழுமம் தலைவர் ஆனந்த் மஹிந்திரா இந்த திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்றவர்களை மஹிந்திரா குழுமம், பணி அமர்த்துவதற்கான வாய்ப்பை வழங்க விரும்புவதாக தெரிவித்தார்.

அவரை தொடர்ந்து ஆர்பிஜி குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா அக்னிவீரர்களை வேலைக்கு அமர்த்துவதற்கான வாய்ப்பை வரவேற்பதாக தெரிவித்தார். இந்த நிலையில் தற்போது டாடா குழும தலைவர் நடராஜன் சந்திரசேகரன் அக்னி வீரர்களை வரவேற்று பேசியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில் "இந்த திட்டம் ராணுவத்தில் இணையும் இளைஞர்களுக்கு தேசத்தை பாதுகாப்பதற்கு ஒரு சிறந்த வாய்ப்பாக மட்டுமல்லாமல், மிகவும் ஒழுக்கமான பயிற்சி பெற்ற வீரர்களை தொழில்துறைகள் அடையாளம் காணவும் உதவும்.

அக்னி வீரர்களின் செயல்திறனை அங்கீகரிப்பதோடு அவர்களுக்கு தொழில்துறையில் சிறந்த வாய்ப்புகளை வழங்க டாடா குழுமம் தயாராக உள்ளது" என தெரிவித்துள்ளார்.

தொழிலதிபர்களின் இந்த அடுத்தடுத்த அறிவிப்பு இளைஞர்களுக்கு நம்பிக்கையூட்டும் விதமாக அமைந்துள்ளது.


Next Story