உலகளவில் 250 கோடி பேருக்கு விவசாயமே வாழ்வாதாரம் 'ஜி-20' விவசாய மந்திரிகள் கூட்டத்தில் பிரதமர் மோடி பெருமிதம்
உலகளவில் 250 கோடி பேருக்கு விவசாயமே வாழ்வாதாரமாக அமைந்துள்ளது என்று ‘ஜி-20’ விவசாய மந்திரிகள் கூட்டத்தில் பிரதமர் மோடி பெருமிதத்துடன் கூறினார்.
புதுடெல்லி,
'ஜி-20' அமைப்பில் இடம் பெற்றுள்ள நாடுகளின் விவசாய மந்திரிகளின் 3 நாள் கூட்டம், ஐதராபாத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது.
இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி நேற்று வீடியோ வாயிலாக பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
உலகளாவிய தெற்கில் ஜி.டி.பி. என்று அழைக்கப்படுகிற மொத்த உள்நாட்டு உற்பத்தியில் விவசாயம் கிட்டத்தட்ட 30 சதவீதமும், வேலைகளில் 60 சதவீதமும் பங்களிப்பு செய்கிறது.
உலகளவில் விவசாயம் 250 கோடி மக்களுக்கு வாழ்வாதாரமாக அமைந்துள்ளது. நாம் நீடித்ததும், எல்லாவற்றையும் உள்ளடக்கியதுமான உணவு அமைப்புகளை கட்டமைப்பதற்கும், உலகளாவிய உர வினியோக சங்கிலிகளை பலப்படுத்துவதற்கும் வழிவகைகளை கண்டறிய வேண்டும். நல்ல மண் வளம், பயிர் ஆரோக்கியம், பயிர் மகசூல் ஆகியவற்றுக்கான விவசாய முறைகளைப் பின்பற்ற வேண்டும்.
கொரோனா வைரஸ் பெருந்தொற்றின்போது, வினியோகச்சங்கிலி பெரும்பாதிப்புக்குள்ளாகி, புவிசார் அரசியல் பதற்றங்களுக்கு காரணமானது. காலநிலை மாற்றம், வானிலையில் பெரும்தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த சவால்கள் அனைத்து உலகளாவிய தென் பகுதிகளில் உணரப்படுகின்றன.
நாங்கள் இயற்கை சாகுபடியை, தொழில்நுட்பம் சார்ந்த சாகுபடியை ஊக்குவிக்கிறோம். இந்தியா முழுவதும் உள்ள விவசாயிகள் இயற்கை சாகுபடி செய்கிறார்கள். அவர்கள் செயற்கை உரங்களையோ, பூச்சிக்கொல்லிகளையோ பயன்படுத்துவதில்லை.
2023-ம் ஆண்டு சர்வதேச சிறுதானியங்களின் ஆண்டாக கொண்டாடப்படுவதை நீங்கள் அறிவீர்கள். சிறுதானியங்கள் ஒன்றும் புதிதல்ல. அவை ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக சாகுபடி செய்யப்படுகின்றன. ஆனால் சந்தைகளும், சந்தையிடலும் நமது தெரிவுகளில் தாக்கத்தை ஏற்படுத்தி விட்டன. எனவேதான் நாம் பாரம்பரிய ரீதியில் சாகுபடி செய்யப்பட்ட உணவு பயிர்களின் மகிமையை மறந்து விட்டோம்.
விவசாயத்தில் இந்தியாவின் 'ஜி-20' முன்னுரிமைகளில் ஒரே பூமியை பத்திரப்படுத்துவதற்கும், நமது ஒரே குடும்பத்தில் இணக்கமான சூழலை உருவாக்கவும், ஒளிமயமான ஒரு எதிர்காலத்துக்கும் கவனம் செலுத்தப்படுகிறது.
உலகளாவிய உணவு பாதுகாப்பை அடைவதற்கான கூட்டு நடவடிக்கையை மேற்கொள்வது பற்றி நீங்கள் ஆழ்ந்து விவாதிக்க வேண்டும்.
நீங்கள் உணவுப் பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்துக்கான உயர்நிலைக் கோட்பாடுகள் மற்றும் சிறு தானியங்கள், பிற தானியங்களுக்கான 'மகரிஷி' முயற்சி ஆகிய 2 உறுதியான முடிவுகளில் செயல்படுகிறீர்கள் என்பதை அறிந்து நான் மகிழ்ச்சி அடைகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.