பொங்கல் பண்டிகை: பூக்களின் விலை பல மடங்கு உயர்வு - விவசாயிகள் மகிழ்ச்சி


தினத்தந்தி 13 Jan 2024 3:49 PM GMT (Updated: 13 Jan 2024 4:01 PM GMT)

உசிலம்பட்டி மலர் சந்தையில் கடந்த வாரம் ரூ.1,500-க்கு விற்பனையான ஒரு கிலோ மல்லிகை இன்று ரூ.3,000-க்கு விற்பனையானது.

சென்னை,

தமிழர் திருநாளான தைப்பொங்கல் பண்டிகை நாளை மறுநாள் கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு தற்போது தமிழகம் முழுவதும் மஞ்சள், கரும்பு, கிழங்குகளின் விற்பனை களைகட்டியுள்ளது. அந்த வகையில் மலர் சந்தைகளில் பூக்களின் விற்பனை அதிகரித்துள்ள நிலையில், பூக்களின் விலை பல மடங்காக உயர்ந்துள்ளது.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் மலர் சந்தையில் மல்லிகைப் பூவின் விலை யாரும் எதிர்பார்க்காத அளவில் கிலோ ரூ.4,000-க்கும், பிச்சிப்பூ, கனகாம்பரம் ஆகியவை தலா ரூ.2,000-க்கும் விற்பனையாகிறது.

உசிலம்பட்டி மலர் சந்தையில் கடந்த வாரம் ரூ.1,500-க்கு விற்பனையான ஒரு கிலோ மல்லிகை இன்று ரூ.3,000-க்கும், கடந்த வாரம் ரூ.500-க்கு விற்பனையான முல்லைப்பூ இன்று ரூ.2,000-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இதேபோல் தஞ்சாவூர் மலர் சந்தையில் மல்லிகைப்பூ ரூ.3,000-க்கும், ஜாதிப்பூ, காக்கரட்டான் ஆகியவை தலா ரூ.1,500-க்கும் விற்பனையானது. திருச்சி காந்தி மார்க்கெட்டிலும் மல்லிகைப்பூ கிலோ ரூ.3,000-க்கு விற்பனை செய்யப்பட்டது. பூக்களின் விலை உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.



Next Story