ஏர் இந்தியா நிறுவனத்தில் 4,500 ஊழியர்கள் விருப்ப ஓய்வு பெற திட்டம் ? - வெளியான தகவல்
விஆர்எஸ் திட்டத்தை இந்த மாத இறுதிக்குள் தேர்ந்தெடுக்கும் ஊழியர்களுக்கு கூடுதல் தொகை வழங்கப்பட இருக்கிறது.
புதுடெல்லி,
டாடா குழுமத்திற்கு சொந்தமான ஏர் இந்தியா நிறுவனத்தின்4,500ஊழியர்கள் விருப்ப ஓய்வு திட்டத்தை (விஆர்எஸ்) தேர்ந்து எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த மாதம் 1 ஆம் தேதி விருப்பு ஓய்வு திட்டத்தை டாடா குழுமம் அறிமுகப்படுத்தியது.
விமான சேவையில் திறமையான புதிய இளைஞர்களை பணியமர்த்துவதன் மூலம் புதிய ஆற்றலைப் புகுத்த முடிவு செய்து ஏர் இந்தியா நிறுவனம் விருப்பு ஓய்வு திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இந்த நிலையில் இதுவரை ஏர் இந்தியா நிறுவனத்திலிருந்து 4500 ஊழியர்கள் விருப்ப ஓய்வுக்கு விண்ணப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அடுத்த ஐந்து ஆண்டுகளில் சுமார் 5,000 ஏர் இந்தியா ஊழியர்கள் ஓய்வு பெற உள்ளனர்.
ஏர் இந்தியாவில் நிரந்தர ஊழியர்கள் விருப்ப ஓய்வை தேர்ந்தெடுப்பதற்கான வயது வரம்பு 55-யில் இருந்து 40 ஆக மாற்றப்பட்டுள்ளது. மேலும் தொடர்ந்து 20 ஆண்டுகள் பணியாற்றவர்களும் இந்த திட்டத்தை தேர்வு செய்யலாம். விஆர்எஸ் திட்டத்தை ஜூலை 31ம் தேதிக்குள் தேர்ந்தெடுக்கும் ஊழியர்களுக்கு கூடுதல் தொகையை அந்த நிறுவனம் வழங்க இருக்கிறது.