பாலியல் வன்கொடுமை செய்த நபரை வீட்டின் அறையில் வைத்து பூட்டிய விமான பணிப்பெண்
விமான பணிப்பெண்ணின் வீட்டிற்கு வந்த அந்த நபர் அவரை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
புதுடெல்லி,
தலைநகர் டெல்லியில் தனியார் விமான நிறுவனத்தில் 30 வயது பெண் விமான பணிப்பெண்ணாக பணியாற்றி வருகிறார். இவர் மெஹ்ருலி பகுதியில் வசித்து வருகிறார்.
இதனிடையே, அப்பெண்ணுக்கும் ஒரு ஆண் நபருடன் கடந்த 2 மாதங்களுக்கு முன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அரசியல் கட்சியை சேர்ந்த அந்த நபர் பகுதி தலைவராகவும் செயல்பட்டு வந்துள்ளார்.
இந்நிலையில், விமான பணிப்பெண்ணின் வீட்டிற்கு நேற்று இரவு அந்த ஆண் நபர் மதுபோதையில் வந்துள்ளார். பின்னர், அந்த பெண்ணை அவர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
பாலியல் வன்கொடுமை செய்த பின்னர் மதுபோதையில் இருந்த அந்த நபரை பாதிக்கப்பட்ட பெண் தனது வீட்டின் அறையில் வைத்து பூட்டியுள்ளார். தொடர்ந்து நடந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் வீட்டில் அறையில் பூட்டி வைக்கப்பட்டிருந்த நபரை கைது செய்தனர். மேலும், பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் அடிப்படையில் பாலியல் வன்கொடுமை செய்த நபரை கைது செய்த போலீசார் அவரை சிறையில் அடைத்தனர்.