பீகாரில் விஷ சாராய சாவு 28 ஆக உயர்வு ''பலியானோர் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க முடியாது'' சட்டசபையில் நிதிஷ்குமார் அறிவிப்பு


பீகாரில் விஷ சாராய சாவு 28 ஆக உயர்வு  பலியானோர் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க முடியாது சட்டசபையில் நிதிஷ்குமார் அறிவிப்பு
x
தினத்தந்தி 17 Dec 2022 3:00 AM IST (Updated: 17 Dec 2022 3:00 AM IST)
t-max-icont-min-icon

பீகாா் மாநிலத்தில் விஷ சாராயம் குடித்து பலியானோா் எண்ணிக்கை 28 ஆக உயர்ந்தது. நேற்று சட்டசபையில் பேசிய முதல் மந்திரி நிதிஷ்குமார் விஷ சாராயத்தால் பலியானவா்களுக்கு எவ்வித இழப்பீடும் வழங்க முடியாது என்றார்.

பாட்னா,

பீகார் மாநிலத்தில் நிதிஷ்குமார் தலைமையிலான கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. கடந்த 14-ந் தேதி சரன் மாவட்டத்தில் உள்ள சாப்ரா பகுதியில் விஷ சாராயம் குடித்ததில் 21 பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். மற்றவர்கள் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்தனா். அவர்களில் சிகிச்சை பலனளிக்காமல் கடந்த 15-ந் தேதி 5 பேர் இறந்ததால் பலியானவர்களின் எண்ணிக்கை 26 ஆக உயர்ந்தது.

இதற்கிடையே சிகிச்சை பலனளிக்காமல் நேற்றும் 2 பேர் இறந்தனர். இதனால் சாவு எண்ணிக்கை 28 ஆக உயர்ந்தது.

126 சாராய வியாபாரிகள் கைது

இதுபற்றி மாவட்ட மாஜிஸ்திரேட்டு கூறுகையில், மாவட்டம் முழுவதும் சோதனை செய்ததில் கடந்த 48 மணி நேரத்தில் 126 சாராய வியாபாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் 4 ஆயிரம் லிட்டர் விஷ சாராயம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இதுசம்பந்தமாக அவசர விசாரணைக்காக கூடுதல் சூப்பிரண்டு தலைமையில் 3 துணை சூப்பிரண்டு மற்றும் 31 போலீசார் ஈடுபட்டுள்ளனர் என்று குறிப்பிட்டார்.

இதற்கிடையே, எதிர்க்கட்சியான பா. ஜனதா, விஷ சாராயத்தால் பலியானவர்களின் எண்ணிக்கையை அரசு மறைப்பதாக குற்றஞ்சாட்டியுள்ளது. இதுபற்றி சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் விஜய் குமார் சின்கா நிருபர்களிடம் கூறுகையில், மாநிலம் முழுவதும் விஷ சாராய விற்பனை போலீசார் பாதுகாப்போடு நடைபெறுகிறது. ஆனால் முதல்-மந்திரி நிதிஷ்குமார் குற்றவாளிகள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் அமைதி காக்கிறார் என்று தெரிவித்தார்.

இழப்பீடு வழங்கப்படாது

விஷ சாராயத்தை குடித்தால் இறந்துதான் போவார்கள் என மக்களை முதல் மந்திரி நிதிஷ்குமார் எச்சரித்துள்ளார். நேற்று சட்டசபையில் பேசிய அவர் கூறியதாவது:-

பீகாரில் மதுவிலக்கு தற்போது நடைமுறையில் உள்ளது. இதனையும் மீறி இதுபோன்ற சம்பவங்கள் அரங்கேறியுள்ளது. ஏழை குடும்பத்தில் உள்ளவர்கள் தங்களது வாழ்வாதாரத்திற்காக விஷ சாராயம் விிற்றுக் கொண்டிருந்தனர். ஆனால் தற்போது அவர்களுக்கு லட்சக்கணக்கில் நிதியுதவி செய்து வேறு வேலைகளுக்கு மாற்றிவிட்டோம்.

பீகாரில் மதுவிலக்கு அமல்படுத்தியதை கடந்த 2017-ம் ஆண்டு பிரதமர் பாராட்டியிருந்தார். ஆனால் தற்போது அவரது கட்சியினர் இதனை எதிர்த்து பேசுகின்றனர். பா.ஜனதா ஆளும் மாநிலங்களில் இருந்து பீகாருக்கு விஷ சாராயம் கொண்டுவரப்படுகிறது.''

விஷ சாராயத்தால் பலியானவா்களுக்கு எவ்வித இழப்பீடும் வழங்கப்படாது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story