அனைத்தும் குடும்ப கட்சிகள்... அ.தி.மு.க.வை கூறிய ஜே.பி. நட்டாவால் பரபரப்பு


அனைத்தும் குடும்ப கட்சிகள்... அ.தி.மு.க.வை கூறிய ஜே.பி. நட்டாவால் பரபரப்பு
x

கர்நாடக சட்டசபை தேர்தல் பிரசாரத்தில் பேசிய ஜே.பி. நட்டா, அனைத்தும் குடும்ப கட்சிகள் என அ.தி.மு.க.வையும் வரிசைப்படுத்தி கூறியது பரபரப்பு ஏற்படுத்தியது.



உடுப்பி,


கர்நாடக சட்டசபை தேர்தல் வருகிற மே மாதம் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கு இன்னும் இரண்டரை மாதங்கள் மட்டுமே உள்ளன. இதனால் அரசியல் கட்சிகள் தேர்தலை எதிர்கொள்ள பொது கூட்டங்கள், பேரணிகள், யாத்திரைகளை நடத்தி வருகின்றன.

இதில் பா.ஜ.க. சார்பில் பிரதமர் மோடி, மத்திய மந்திரி அமித்ஷா, தேசிய தலைவர் ஜே.பி. நட்டா ஆகியோர் அடிக்கடி கர்நாடகம் வந்து நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார்கள்.

இதன்படி, சமீபத்தில் பா.ஜ.க. தேசிய தலைவராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜே.பி. நட்டா கர்நாடகாவின் உடுப்பி நகருக்கு இன்று வருகை தந்து உள்ளார். அவர் தேர்தல் பிரசாரத்தில் கலந்து கொண்டார்.

திரண்டிருந்த கூட்டத்தினர் முன் அவர் பேசும்போது, பா.ஜ.க.வின் வரலாற்றில் உடுப்பிக்கு என்று சிறப்பு இடம் உள்ளது. 1968-ம் ஆண்டில் முதன்முறையாக உடுப்பி மாநகராட்சியில் பா.ஜ.க. வெற்றி பெற்றது. தென்னிந்தியாவில் நுழைந்த தருணம் அது.

இன்றுள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் குடும்ப கட்சிகளாக உள்ளன. காங்கிரஸ், சமாஜ்வாடி, ராஷ்டீரிய ஜனதா தளம், சிவசேனா (உத்தவ் தாக்கரே), மமதா பானர்ஜி, ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ், டி.ஆர்.எஸ்., பாரத ராஷ்டீரிய சமிதி மற்றும் அ.இ.அ.தி.மு.க. என அனைத்தும் குடும்ப கட்சிகளே என கூறியுள்ளார்.

தமிழகத்தில் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் பா.ஜ.க. இடம் பெற்று உள்ள சூழலில் நட்டாவின் பேச்சு பரபரப்பு ஏற்படுத்தியது.

தொடர்ந்து நட்டா பேசும்போது, கடந்த 2022-ம் ஆண்டு ஜூன் மாதத்தில் பிரதமர் மோடி அளித்த ரூ.33 ஆயிரம் கோடிக்கான திட்டங்களால், இந்தியாவின் 2-வது மிக பெரிய பொருளாதார மாநிலத்தில் ஒன்றாக கர்நாடகம் மாற போகிறது என்று பேசியுள்ளார்.




Next Story