பழங்குடியினருக்கு இட ஒதுக்கீட்டை அதிகரிக்க விரைவில் அனைத்துக்கட்சி கூட்டம்; முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை அறிவிப்பு


பழங்குடியினருக்கு இட ஒதுக்கீட்டை அதிகரிக்க விரைவில் அனைத்துக்கட்சி கூட்டம்; முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை அறிவிப்பு
x
தினத்தந்தி 23 Sep 2022 6:45 PM GMT (Updated: 23 Sep 2022 6:45 PM GMT)

பழங்குடியினருக்கு இட ஒதுக்கீட்டை அதிகரிப்பது குறித்து முடிவு எடுக்க விரைவில் அனைத்துக்கட்சி கூட்டம் கூட்டப்படும் என்று சட்டசபையில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை அறிவித்துள்ளார்.

பெங்களூரு:

தர்ணா போராட்டம்

கர்நாடக சட்டசபையில் நேற்று ஜனதா தளம் (எஸ்) மற்றும் காங்கிரஸ் கட்சிகள் சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். கடும் அமளிக்கு இடையே முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அவர் பேசியதாவது:-

கர்நாடகத்தில் ஆதிதிராவிடர், பழங்குடியினர் உள்பட பல்வேறு சமூகங்கள் இட ஒதுக்கீடு கேட்டு போராடி வருகின்றன. பழங்குடியின சமூகத்தினர் இட ஒதுக்கீட்டை அதிகரிக்குமாறு கேட்கிறார்கள். இந்த கோாிக்கையை வலியுறுத்தி அந்த சமூகத்தின் மடாதிபதி பெங்களூரு சுதந்திர பூங்காவில் பல நாட்களாக தா்ணா போராட்டம் நடத்தி வருகிறார்.

நீதிபதிகளின் அறிக்கைகள்

இந்த விவகாரம் குறித்து சபையில் உறுப்பினர்கள் சிலர் அரசின் கவனத்தை ஈர்த்தனர். மேலும் நீதிபதிகள் நாகமோகன்தாஸ், சுபாஷ்ஆதி ஆகியோர் தங்களின் அறிக்கைகளை கொடுத்துள்ளனர். இதுகுறித்து விவாதிக்க முடிவு எடுக்க அனைத்துக்கட்சி கூட்டத்தை விரைவில் கூட்ட முடிவு செய்துள்ளோம். அதாவது ஒரு வாரத்தில் இந்த கூட்டம் கூட்டப்படும். இதில் நீதிபதிகள் வழங்கிய அறிக்கைகள் குறித்து விவாதித்து, பழங்குடியினர் பயன்பெறும் வகையில், அவர்களுக்கு நீதி கிடைக்கும் வகையில் அந்த கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும்.

இவ்வாறு பசவராஜ் பொம்மை பேசினார்.

அப்போது பேசிய சித்தராமையா, "பழங்குடியினருக்கு இட ஒதுக்கீட்டில் உரிய நீதி கிடைக்க வேண்டும். அந்த சமூகத்தை சேர்ந்த மடாதிபதி நீண்ட காலமாக பெங்களூரு சுதந்திர பூங்காவில் தர்ணா நடத்தி வருகிறார். அதனால் அனைத்துக்கட்சி கூட்டத்தை உடனடியாக கூட்டி ஒரு முடிவு எடுக்க வேண்டும். அந்த சமூக மக்களுக்கு உரிய நியாயம் கிடைக்க வேண்டும்" என்றார்.

உரிய நியாயம்

அதன் பிறகு குமாரசாமி பேசுகையில், "பழங்குடியின சமூகத்திற்கு உரிய நியாயம் கிடைக்கும் வகையில் அனைத்துக்கட்சி கூட்டத்தை உடனடியாக கூட்டி முடிவு எடுக்க வேண்டும். இந்த விஷயத்தில் எங்கள் கட்சி அரசின் முடிவை ஆதரிக்கிறது" என்றார்.


Next Story